சூர்யாவின் அடுத்த படம் என்ன? சமீப ஆண்டுகளில் அவரது புதிய படம் வெளியாகும் நேரத்தில் இந்த கேள்வி தவறாமல் எழுப்பப்படுகிறது. அவரது படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் போதுமான அளவுக்குப் பூர்த்தி செய்யாமல் இருந்து வருவதே அதற்குக் காரணம். suriya 46 going to directed by telugu director
பசங்க 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் ஆகியன ஓரளவுக்கு கவனிப்பையும் வசூலையும் பெற்றன. சூரரைப் போற்று, ஜெய் பீம் இரண்டும் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. என்றாலும், இடைப்பட்ட காலத்தில் தியேட்டரில் வெளியான சூர்யா படங்கள் ஏதும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்தச் சூழலில், ‘ரெட்ரோ’ படம் வெளியாகி 235 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. சூர்யா ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் படத்தில் அவரது இருப்பு இருந்தபோதும், தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூணும் அளவுக்கு அது அமையவில்லை.
‘அப்படியொரு படம் அடுத்ததாக அமையாதா’ என்ற ரசிகர்களின் ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை ஈடு செய்கிற வகையில் ‘சூர்யா 46’ படத்தின் பூஜை அமைந்திருக்கிறது.

’வாத்தி’ தந்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்குகிற இப்படத்தில் சூர்யா உடன் மமிதா பைஜு இணைந்திருக்கிறார். இன்னொரு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இது போக ராதிகா சரத்குமார், ’ஆளவந்தான்’, ‘சாது’ படங்களில் நாயகியாக நடித்த ரவீணா டாண்டன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, படத்தொகுப்பாளர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என்று ‘லக்கி பாஸ்கர்’ வெற்றியைத் தந்த குழு இதில் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்ட வெங்கி அட்லூரியின் குருவான இயக்குனர் த்ரிவிக்ரம், இதன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

வெங்கி அட்லூரி – சூர்யா கூட்டணியாவது ரசிகர்கள் எதிர்பார்க்கிற ‘தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ தருமா?