சுரேஷ்கோபி படத்திற்கு சிக்கல்… நீதிமன்றத்தை நாடிய படக்குழு!

Published On:

| By uthay Padagalingam

Suresh Gopi movie postponed

தொண்ணூறுகளில் மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு இணையான இடத்தைப் பிடித்திருந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. இடையில் சில காலம் குறைவாகத் திரையில் தலைகாட்டியவர், 2015க்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. Suresh Gopi movie postponed

ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தாலும், ஆண்டுக்கு ஓரிரு படங்கள் என்றே அவரது தேர்வு இருந்து வருகிறது. மகன் மாதவ் சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன், திவ்யா, அஸ்கர் அலி, பைஜு சந்தோஷ் உள்ளிட்டோருடன் இவர் நடித்த ‘ஜேஎஸ்கே – ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சொன்னபடி படம் தியேட்டரில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது பூதாகரமாகி உள்ளது. காரணம், இப்படத்தின் தலைப்பில் உள்ள ‘ஜானகி’ என்ற பெயர் இந்து மதக் கடவுளான சீதா தேவியைக் குறிப்பிடுவதாக வெளியான சர்ச்சை தான்.

அதனால், இப்படத்தின் டைட்டிலை மாற்றுமாறு சென்சார் போர்டு உத்தரவிட்டிருப்பதாகத் தினசரிகளில் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இத்தனைக்கும் கடந்த 18ஆம் தேதியன்று இப்படம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல தணிக்கை அலுவலகத்தில் சான்றிதழ் வழங்குவதற்காகத் திரையிடப்பட்டிருக்கிறது. தணிக்கைத் துறை அதிகாரியுடன் நான்கு பேர் அடங்கிய தணிக்கைக் குழு இப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘யு/ஏ’ 13+ சான்றிதழ் வழங்குவதாகக் கூறியிருக்கிறது.

வேறு எந்த ஆட்சேபணைகளும் தணிக்கைத் துறை சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்கிறது படக்குழு.

ஆனால், தினசரிகளில் ‘டைட்டில் மாற்றம்’ பற்றிய செய்திகள் வெளியான நிலையில் படத்திற்கான சான்றிதழ் வழங்குவது தாமதமாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

மும்பையிலுள்ள மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய அலுவலகமே இதனை உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வந்தன.

மண்டலத் தணிக்கைக் குழுவின் முடிவுகளில் ஆட்சேபனை இருப்பதாகச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அணுகினால் மட்டுமே, தலைமை அலுவலகம் சில முடிவுகளைத் தெரிவிப்பது வழக்கம். சுரேஷ் கோபி பட விவகாரத்தில், மண்டலத் தணிக்கைக் குழுவின் முடிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது படத் தயாரிப்பு நிறுவனம். அப்படியிருந்தும் இப்படியொரு சிக்கல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்கிறது அத்தரப்பு.

‘குறிப்பிட்ட நீக்கங்களுடன் படத்தைச் சமர்ப்பிதற்கான ஷோ காஸ் நோட்டீஸ் வழங்குவது நிலுவையில் உள்ளது’ என்ற தகவல், தற்போது இப்படம் தொடர்பாக தணிக்கைக் குழுவின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது படக்குழு.

இதற்கு எதிராக, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது படத்தைத் தயாரித்துள்ள காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

“ஏற்கனவே இதே தலைப்பில் விளம்பரங்கள், விநியோகம் நிகழ்ந்துவிட்ட நிலையில் தற்போது பெயர் மாற்றம் செய்வது சாத்தியமில்லை. மேலும், சான்றிதழ் வழங்குவது தாமதமாவது கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்தும்’ என்று அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

தணிக்கை அலுவலகம் நேரடியாக ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் வாயிலாக இத்தகவல் தமக்குத் தெரிய வந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக சுரேஷ் கோபி இருந்துவரும் நிலையில், அவர் நடித்த ஒரு திரைப்படமே பிரச்சனையில் சிக்கியிருப்பது மலையாளத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Suresh Gopi movie postponed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share