நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் : விமர்சனம்!

Published On:

| By christopher

காமெடியாக சொல்லப்படும் திருமண மோசடி!

மலையாளத் திரையுலகில் இருந்து வேறு மொழி ரசிகர்கள் விரும்பி ரசிக்கிற நட்சத்திரங்களில் பகத் பாசில், சௌபின் ஷாகிர், பிஜு மேனன், பசில் ஜோசப், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் வரிசையில் இடம்பெறுகிற ஒருவர் சூரஜ் வெஞ்சாரமூடு.

கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளிவந்த விக்ருதி, ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், டிரைவிங் லைசென்ஸ், தி கிரேட் இண்டியன் கிச்சன், ஜன கண மண, முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் உட்படப் பல படங்கள் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிற நாயகர்களுடன், நடிகர்களுடன் நடிக்கிறபோதும் தனித்துவமாகத் தெரியும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் சூரஜ். அவரே பிரதானமாக நடிக்கிற ஒரு படைப்பு என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ சீரிஸின் ட்ரெய்லர்.

மிகச்சாதாரணமான, வெள்ளந்தியான ஒரு கிராமத்து ஆள் ஐந்து பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்வதாகக் காட்டியது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிற இந்த வெப்சீரிஸ் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?

ஒரு சோம்பேறியின் கதை!

கேரளாவிலுள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (சூரஜ் வெஞ்சாரமூடு). தாய் நானியம்மா (பானுமதி) அவரது தாய். கூலி வேலைக்குச் சென்று மகனுக்குச் சோறு போடுகிறவர். எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறியாக இருக்கிற மகனைத் திட்டினாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் அந்தத் தாய். தனது அண்ணன் மகள் ஜானகியை (ஆல்பி பஞ்சிகரன்) மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது நானியம்மாவின் ஆசை.

நாகேந்திரனுக்கு வாழ்க்கை லட்சியம் என்று எதுவும் இல்லை. உழைக்காமல், பிறரது காசில் தினமும் வயிறாரச் சாப்பிட்டால் போதும் என்ற நினைப்பைத் தவிர அவரிடத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை.

அந்த காலகட்டத்தில் நாகேந்திரனின் உற்ற தோழனாக இருப்பவர் சோமன் (அலெக்சாண்டர் பிரசாந்த்). நாடகக் கலைஞரான அவர், தனக்குக் காசு கிடைக்கும்போதெல்லாம் நாகேந்திரனுக்கும் சேர்த்துச் செலவு செய்கிறார்.

ஒருநாள் குவைத்தில் இருந்து வந்த நண்பன் பௌலோஸை (ரமேஷ் பிஷரோடி) சோமனும் நாகேந்திரனும் சந்திக்கின்றனர். அவரது வசதியான வாழ்வைக் கண்டு இருவரும் மலைத்துப் போகின்றனர்.

ஒருமுறை உயிருக்கும் மானத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிற ஒரு விவகாரத்தில் பௌலோஸ் சிக்கிக்கொள்ள, அவரைக் காப்பாற்றுகிறார் நாகேந்திரன். அப்போது, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று அவர் கேட்க, இவரோ ‘எனக்கும் குவைத் செல்ல வேண்டும்’ என்கிறார்.

பிறகு, நாகேந்திரன் குவைத் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகக் கூறுகிறார் பௌலோஸ். ’விசா எடுக்க பதினாறாயிரம் ரூபாய் தயார் செய்துவிடு’ என்கிறார். அதனைக் கேட்டதும் அதிர்கிறார் நாகேந்திரன். காரணம், அவரிடத்தில் நூறு ரூபாய் கூட இல்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் நாகேந்திரன் முழிக்க, ‘பேசாம உன் மாமன் மகளைக் கட்டிக்கிட்டு வரதட்சணையை வாங்கி காசைக் கட்டிடுவோம்’ என்கிறார் சோமன். தாயிடம் நாகேந்திரன் ‘உன் அண்ணனிடம் வரதட்சணை கேள்’ என்று நிபந்தனையிட, அவரும் ‘சரி’ என்கிறார்.

ஜானகி – நாகேந்திரன் திருமணம் இனிதே நடக்கிறது. ஆனால், அதன்பிறகே ஜானகி வீட்டார் வரதட்சணை எதுவும் தரவில்லை என்ற விஷயம் நாகேந்திரனுக்குத் தெரிய வருகிறது.

ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் நாகேந்திரன், சோமனைத் தேடிச் சென்று அடி வெளுக்கிறார். நடந்ததை அறியும் சோமன், ‘உன்னை ஏமாத்தினவங்களை நீ பதிலுக்கு ஏமாத்திடு’ என்கிறார்.

அன்றிரவு, சோமனும் நாகேந்திரனும் அந்த ஊரை விட்டு வெளியேறுகின்றனர். லில்லி (கிரேஸி ஆண்டனி) என்ற பெண்ணைப் பார்க்கச் செல்கின்றனர். அவரது சகோதரர் வர்க்கி (சாஜன்) ஒரு போலீஸ் அதிகாரி. முப்பதைக் கடந்தும் லில்லி திருமணமாகாமல் இருப்பதால், அவரை யாரோ ஒரு நபருக்குக் கட்டிக் கொடுத்தால் போதுமென்று நினைக்கிறார்.

மூர்க்கத்தையும் கொஞ்சலையும் அடுத்தடுத்து வெளிப்படுத்துவதையே இயல்பாகக் கொண்டவர் லில்லி. ஜோசப் என்ற பெயரில் அவரைப் பெண் பார்க்கச் செல்கிறார் நாகேந்திரன். லில்லிக்கு அவரைப் பிடித்துப் போக, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், வர்க்கி வரதட்சணையாக மூவாயிரத்தைக் கையில் தந்துவிட்டு, ‘இனிமேல் இந்த தோட்டம், வீடு எல்லாம் உங்களுக்குத்தான்’ என்கிறார்.

பதினாறாயிரம் ரூபாய் சேர்த்து குவைத்துக்குச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் நாகேந்திரன், அவர் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அங்கிருந்து சோமனும் நாகேந்திரனும் நழுவுகின்றனர்.

பிறகு லைலா சுல்தானா (ஸ்வேதா மேனன்) என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறார் நாகேந்திரன். அப்போது தான், அந்தப் பெண் தனது முதல் கணவனைக் கொலை செய்துவிட்டுச் சிறைக்குச் சென்று வந்தவர் என்று தெரிய வருகிறது. அவரிடம் இருந்து நழுவினாலும், நாகேந்திரனுக்குப் பெரிதாகப் பணம் கிடைக்கவில்லை.

பிறகு, தனது கல்லூரி ஆசிரியரோடு பழகிக் கர்ப்பமுற்ற சாவித்திரியைத் (நிரஞ்சனா அனூப்) திருமணம் செய்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த நகையில் பாதியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார் நாகேந்திரன்.

அடுத்து தங்கம் (கனி குஸ்ருதி) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அந்தப் பெண் ஒரு விலைமாது. பஞ்சாயத்தில் அவரை ஊரை விட்டு வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட, அதிலிருந்து மீட்கும் வகையில் அவருக்குத் திருமணம் நடத்த ஏற்பாடாகிறது. காசை வாங்கிக்கொண்டு அவரைத் திருமணம் செய்கிறார் நாகேந்திரன்.

தங்கத்திடம் இருந்த பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிக்கிறார் நாகேந்திரன். கேரளாவின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று ‘திருமண மோசடி’யில் ஈடுபடும் சோமனும் நாகேதிரனும் நேராகப் பழனிக்கு வருகின்றனர்.

அங்கு மொழி (அம்மு அபிராமி) என்ற பெண்ணைக் காண்கிறார் நாகேந்திரன். ஆனால், அவரைத் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறார். அதனைக் கேட்டு சோமன் ஆத்திரமடைகிறார். ‘இன்னும் சில ஆயிரம் ரூபாய் தயார் செய்துவிட்டால் நீ குவைத் போய்விடலாம். நான் எங்காவது சென்று பிழைத்துக்கொள்வேன்’ என்கிறார்.

தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் வர்க்கி வந்ததைச் சொல்லும் சோமன், ‘இந்தப் பெண்ணையும் ஏமாற்றிவிட்டு எங்காவது சென்றுவிடலாம்’ என்கிறார். கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லாதபோதும், மொழியைத் திருமணம் செய்கிறார் நாகேந்திரன். ஆனால், முதலிரவின் போது அவரிடத்தில் எல்லா உண்மைகளையும் சொல்கிறார். அதனைக் கேட்டபிறகு, ‘இனிமேல் எவரையும் ஏமாற்றாமல் நாம் நேர்மையாக வாழலாம்’ என்கிறார் மொழி.

அடுத்தநாள் புலரும்பொழுது, நாகேந்திரனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து நிற்கிறது. அது என்ன? அதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதோடு ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ நிறைவடைகிறது. ’ஒரு வாழ்க்கை; 5 மனைவிகள்’ என்பது டைட்டிலின் கீழே டேக்லைனாக இடம்பெறுகிறது. அதுவே, இதன் உள்ளடக்கத்தைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது.

மேற்சொன்ன கதையில் இருந்தே, அது நிகழும் காலகட்டத்தை அறிந்துகொள்ள முடியும். எழுபதுகளின் இறுதியில் நடப்பதாக இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலையில் எழும்போது அறை வாசலில் வைக்கப்பட்டிருக்கும் காபியைப் பார்த்தவாறே குளிக்கச் செல்லும் நாகேந்திரன், ‘இந்த வெந்நீரை எடுத்து குளிக்கிற இடத்துல வச்சாத்தான் என்ன’ என்று சலித்துக்கொள்வார். அதுவே அவரது அறிமுகக் காட்சி. அதுவே, அவர் எப்பேர்ப்பட்ட நபர் என்பதைச் சொல்லிவிடும்.

இந்தக் கதையில் நாகேந்திரன் ‘காமுகனாக’ காட்டப்படவில்லை. ஐந்து பெண்களை மணந்தபோதும், அவர்களில் எவர் மீதும் பாலியல் ஈர்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. மொழி மீதே அது ஏற்படுவதாகக் காட்டுகிறது இக்கதை. அதனால், இதன் கிளைமேக்ஸ் நமக்குச் சிரிப்பூட்டுகிறது.

 

சிரிப்பே வரலை!

உண்மையைச் சொன்னால், நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் நாம் பார்த்த ‘நான் அவனில்லை’ படத்தின் இன்னொரு சாயலைக் கொண்டது. எழுபதுகளின் பின்னணியும், நாகேந்திரன் பாத்திரத்தின் இயல்பும் மட்டுமே இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆனால், நாகேந்திரன் ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்வது திரையில் முழுக்க நகைச்சுவையாகக் காட்டப்படவில்லை. அதுவே இதன் முதல் பலவீனம். மற்றபடி அக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமோ, அவற்றின் நம்பகத்தன்மையோ கேள்வி எழுப்பும்விதமாக இல்லாதது ஆறுதல்.

இக்கதையை எழுதி இயக்கி, தயாரித்திருக்கிறார் நிதின் ரெஞ்சி பணிக்கர். ஒரு திரைப்படத்திற்கு உரிய திரைக்கதையைக் கொண்டிராவிட்டாலும், நாயக பாத்திரத்தைக் கொண்டு சுவாரஸ்யமாகக் கதை சொல்லலாம் என்று நினைத்திருக்கிறார். அதற்கேற்ப, சுமார் முப்பது நிமிடங்களைக் கொண்ட ஆறு எபிசோடுகளாக இதனை வார்த்திருக்கிறார்.

ஒவ்வொரு பெண்ணையும் மணக்க நாகேந்திரன் தனக்குத்தானே என்ன காரணத்தைச் சொல்லிக் கொள்கிறார் என்பது மட்டுமே இக்கதையைக் காணத் தூண்டுவதற்கான முக்கியக் காரணியாக உள்ளது. அது வசனங்களாக இல்லாதது இன்னொரு ஆறுதல்.

ஆங்காங்கே நகைச்சுவை இருப்பதால், நம்மால் மிகச்சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது. அதனால், ‘சிரிப்பே வரலை’ எனும்விதமாகவே பல இடங்கள் நகர்கின்றன.

நிகில் பிரவீன் ஒளிப்பதிவு, பசுமையாகத் திகழும் கேரளத்தின் அழகைக் காட்டுகிறது. நாற்பதாண்டுகளுக்கு முந்தைய கதை என்பதனை உணர்த்துகிற அளவுக்கு, டிஐ மூலமாக பிரேம்களில் வண்ணங்கள் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளன.

மன்சூர் முத்தூட்டி காட்சிகளை நீட்டி முழக்காமல் ‘கத்திரி’ போட்டுள்ளார். திரைக்கதை மிக மெதுவாக நகர்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாதது தெளிவாகத் தெரிகிறது.

ரஞ்சின் ராஜின் பின்னணி இசை, நகைச்சுவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. வசனங்கள் அதனைச் செய்ய இயலாதபோது, அதுவே அந்த இடத்தை எடுத்துக் கொள்கிறது.

நாகேந்திரனாக வரும் சூரஜ் வெஞ்சாரமூடு, சோமனாக நடித்துள்ள பிரசாந்த் அலெக்சாண்டரைச் சுற்றியே மொத்தக் கதையும் பின்னப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கு இடையிலான பிணைப்பைச் சொல்ல முதல் எபிசோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகள் அதனை வழிமொழிகின்றன. ஆனால் நான்காவது, ஐந்தாவது எபிசோடுகளில் கிளைக்கதைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இறுதியாக வரும் எபிசோடு மட்டுமே மீண்டும் பழைய தடத்தில் கதை நகர உதவுகிறது.

சூரஜ் வெஞ்சாரமூடுவின் வெற்றி!

எதற்கும் உதவாதவன் என்கிற தொனியில் முகத்தை வைத்துக்கொள்கிற நாகேந்திரன், அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றுகிற வேளைகளில் குற்ற உணர்வையும் திருட்டுத்தனத்தையும் முகத்தில் தேக்கிக் கொள்கிறார். அதனை ஒரு பிரேம் கூட தவறவிடாமல் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் சூரஜ். அவர் மீது மட்டுமே நமது கவனம் குவிவதால், திரைக்கதை ஊர்ந்து செல்வதை நாம் கவனிப்பதில்லை என்பதே உண்மை.

போலவே, ’அடப்பாவி’ என்று நாம் சொல்லும்விதமாகவே பிரசாந்த் அலெக்சாண்டரும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ’காதல் தி கோர்’ படத்தில் மம்முட்டியோடு நடித்தவரா இவர் என்று சொல்லும் அளவுக்கு அசத்தியிருக்கிறார்.

மொத்தமுள்ள ஆறு நாயகிகளில் கிரேஸி ஆண்டனி தனது ஆர்ப்பரிப்பான நடிப்பால் ஈர்க்கிறார் என்றால், பாந்தமாகத் தோன்றி நம்மை அசத்தியிருக்கிறார் அம்மு அபிராமி. மற்றவர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

அரை நிர்வாணக் காட்சிகள், வழக்கத்திற்கு மாறான பெண் பாத்திரங்கள் என்று தொடர்ந்து நடித்துவரும் கனி குஸ்ருதி, இதில் விலைமாதுவாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘போல்டு’ ரகம் என்றாலும், ‘ஒரேமாதிரியாகத்தான் நடிப்பாரா’ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இவர்கள் தவிர்த்து ஜனார்த்தனன், நானியம்மா, சாஜன் போன்றவர்களோடு ரமேஷ் பிஷ்ரோடி, ஸ்ரீஜித் ரவி, ஷாலின் ஜோயா, ரேஷ்மி போபன், ஸ்ரீகாந்த் முரளி, அப்புக்குட்டி போன்றவர்கள் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போயிருக்கின்றனர்.

இந்த வெப்சீரிஸில் தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் மிகக்குறைவு. ஆனால், ‘நான் அவனில்லை’ பட டைப்பில் அமைந்துள்ள கதை மட்டுமே இதன் யுஎஸ்பியாக உள்ளது. சரி, இப்படியொரு கதையை நாம் ஏன் பார்க்க விரும்புகிறோம்?

இதே பின்னணியில் ஹாரர், த்ரில்லர், ஆக்‌ஷன் கதைகளைப் பார்க்கிறபோது நமக்குள் என்ன நிகழ்கிறது? நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ் அதற்கு மாறாக என்ன அனுபவத்தைத் தருகிறது? பத்திரிகைகளில் வெளியாகிற திருமண மோசடி செய்திகளுக்கும் இது தரும் அனுபவத்திற்குமான ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன? இக்கேள்விகளைக் கேட்டுக்கொள்வதோடு, பதில்களையும் நமக்கு நாமே சொல்லிக்கொள்வதே இந்த வெப்சீரிஸின் வெற்றி. ‘நாகேந்திரன்’ஸ் ஹனிமூன்ஸ்’ அதனை மட்டுமே சாதித்திருக்கிறது..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு : ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share