திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திமுக மகளிர் அணி சார்பாக, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே.. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே’ என்ற பாரதியார் பாடலைப் பாடி தனது உரையை தொடங்கினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு நீண்ட பாரம்பரியம் மற்றும் பெருமைகளை கொண்டது. ஜாதி மத வேறுபாடுகள் இன்றி மொழி மீது பற்றோடு தமிழ்நாடு உள்ளது பெருமையாக இருக்கிறது. பெரியார், அண்ணாதுரை ஆகியோர் வலியுறுத்திய சமூக நீதியிலும் இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது.
பெண்களுக்காக முதன்முறையாக பெரியார் சுயமரியாதை மாநாட்டினை நடத்தினார். அதே வழியில் இந்த மாநாடும் தற்போது நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா – தமிழ்நாடு இடையே பாரம்பரிய தொடர்பு உள்ளது. மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் ஆகியோரை போன்று தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு கொண்டாடி வருகிறது.
நாடாளுமன்றத்தில் மக்கள் சார்ந்த ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் கட்சி என்றால் அது திமுக தான்.
கூட்டாட்சி தத்துவத்திற்காக தமிழ்நாடு குரல் கொடுத்து வருவதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக டெல்லியில் இருந்து முன்னெடுக்கப்படும் படையெடுப்புகளை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது.
திமுக எம்பி கனிமொழியை கண்டால் பாஜகவுக்கு பயம். நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் பேச எழுந்தாலே பாஜகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். கனிமொழி எப்போதும் பெண்கள் என்றாலே அன்பு, கருணை என்று எங்களை போற்ற வேண்டாம். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. ஆணுக்கு பெண்ணுக்கும் இடையிலான சம உரிமையை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது முக்கியமானது.
பெண்கள் நலனுக்காக தமிழ்நாடு முதல்வரும், எனது அண்ணனுமான மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அனைத்து திட்டங்களும் பாராட்டுக்குரியது” என்று பேசினார்.
திமுகவில் சீட் வேண்டும்!
இதற்கிடையே, ”மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அண்ணன் ஸ்டாலின் எனக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும்” என்று சுப்ரியா சுலே கூறியது அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா