சனாதன தர்மம் விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த ஒரு புதிய வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. supreme court udhayanidhi sanatana
கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக்கூடாது. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம். அதனை ஒழிக்கவே முயற்சி செய்வோம். அதேபோல் தான் சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது”என தெரிவித்திருந்தார்
உதயநிதியின் இந்த பேச்சுக்கு வட மாநிலங்களில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உத்தரபிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, பல மாநிலங்களில் தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உதயநிதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உதயநிதி தரப்பில், மூத்த வழக்கறிஞ்ர்கள் அபிஷேக்மனு சிங்க்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி, “உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தும், பிகார் மாநிலத்தில் அவருக்கு எதிராக புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூபுர் சர்மா, முகமது ஜுபைர் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகியோரின் வழக்குகளில், பல இடங்களில் பதிவான வழக்குகளை ஒரே நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, உதயநிதி வழக்கையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்” என்று வாதிட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவான வழக்கு தொடர்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பதை போல, சனாதன தர்மத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று துணை முதல்வர் பேசியிருக்கிறார்.
வேறொரு மாநிலத்தின் முதலமைச்சர் இஸ்லாம் மதம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசினால் நீங்கள் அதனை ஊக்குவிப்பீர்களா?” என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரதிவாதிகள் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும். உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். supreme court udhayanidhi sanatana
