செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Selvam

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜூனியர் என்ஜினியர்ஸ், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையானது சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

“செந்தில் பாலாஜி மீதான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும், விசாரணை தாமதமாவதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது, உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டிருந்தது. இந்த அறிக்கை விவரத்தை சீலிட்ட உறையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அபய் எஸ்.ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது நீதிபதி, “எம்.பி. எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தற்போது 29 வழக்குகளை விசாரித்து வருகிறார். இதில் 20 வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன. செந்தில் பாலாஜி வழக்கில் 2,000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களும், 200 சாட்சிகளும் இருக்கிறார்கள்.

குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுக்களை பார்க்கும்போது, இந்த வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை அடுத்த விசாரணைக்குள் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

12 மாவட்டங்களில் மழை : வானிலை அப்டேட்!

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்… பாமக கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share