தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த மறு விசாரணை உத்தரவை எதிர்த்து துரைமுருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்ததாகும். இந்த வழக்கில் இருந்து துரைமுருகனையும் அவரது குடும்பத்தினரையும் வேலூர் நீதிமன்றம் ஏற்கனவே விடுவித்திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இந்த விடுதலையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, அமைச்சர் துரைமுருகனின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றதோடு, வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம், வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதும், வழக்கின் தினசரி விசாரணை நடத்தப்படுவதும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம், வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதும், வழக்கின் தினசரி விசாரணை நடத்தப்படுவதும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
பின்னணி என்ன?
2001: துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
2002: அதிமுக ஆட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.
அக்டோபர் 2002: லஞ்ச ஒழிப்புத்துறை துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தியது.
பிப்ரவரி 23, 2007: வேலூர் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி துரைமுருகன் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.
2012-2013: லஞ்ச ஒழிப்புத்துறை, இந்த விடுவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. 1,789 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
ஏப்ரல் 23, 2025: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், 2007-ல் வேலூர் நீதிமன்றம் வழங்கிய விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.
ஏப்ரல் 1, 2026: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
2-வது சொத்துக் குவிப்பு வழக்கு (2006 – 2011)
திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது 2-வது வழக்கு தொடரப்பட்டது.
நவம்பர் 23, 2011: அதிமுக ஆட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்தது.
நவம்பர் 24, 2011: சென்னை, வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
ஜனவரி 3, 2013: வேலூர் நீதிமன்றத்தில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஜனவரி 2017: வேலூர் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்தும் துரைமுருகனை விடுவித்து உத்தரவிட்டது.
ஏப்ரல் 24, 2025: முதல் வழக்கைப் போலவே, இந்த விடுவிப்பு உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
செப்டம்பர் 4, 2025: இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
செப்டம்பர் 10, 2025: சென்னை உயர் நீதிமன்றம், துரைமுருகன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, பிடிவாரண்டிற்குத் தடை விதித்தது.
2025-ல் இந்த வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
