ஜாபர் சேட் வழக்கில் இயற்கை நீதிக்கான நடைமுறைகளை மீறிய சென்னை உயர்நீதிமன்றம்- உச்சநீதிமன்றம் கடும் விளாசல்!

Published On:

| By Minnambalam Desk

Supreme Court Slams Madras High Court

தமிழக காவல்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்துவிட்டு திடீரென மீண்டும் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜாபர் சேட் வழக்கில் இயற்கை நீதிக்கான நடைமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மீது 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டு மனையை முறைகேடாக பெற்றதாக கூறி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. Supreme Court Slams Madras High Court

இதனையடுத்து 2020-ம் ஆண்டு ஜாபர் சேட் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத்துறையின் இவ்வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர்சேட் மனுத் தாக்கல் செய்தார். அதில், தம் மீதான வழக்கை 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது; அதனால் அமலாக்கத்துறை மீண்டும் வழக்கு தொடர முடியாது என ஜாபர் சேட் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி அதிரடித் தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில், ஜாபர் சேட் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துவிட்டது; அதனால் அமலாக்கத்துறை பதிவு செய்த இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ இந்த வழக்கை மீண்டும் ஆகஸ்ட் 23-ந் தேதி விசாரணைக்குப் பட்டியலிட்டு விசாரணை நடத்தியது. இதற்கு ஜாபர்சேட் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாபர் சேட் வழக்கறிஞர் டி மோகன், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, வழக்கை ரத்து செய்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், இயற்கை நீதிக்கான அடிப்படை விதிகளைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் பின்பற்றாமல் மீண்டும் விசாரிக்கிறது எனவும் வாதிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்தார். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர், ஜாபர் சேட் வழக்கின் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். மேலும் ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஜாபர் சேட் வழக்கு தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் ஜாபர் சேட் தொடர்ந்த இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அபய் எஸ்.ஒஹா, உஜ்வால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாபர் சேட் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், அமலாக்கத்துறை சார்பில் ஜோஹெப் ஹூசைன் ஆகியோர் ஆஜராகினர்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்திருந்த அறிக்கையை முழுமையாக நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்து,. இந்த வழக்கை முடித்து வைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒஹா, உஜ்வால் புயான்.

மேலும், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிக்க 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; ஏன் உங்கள் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கூடாது என விளக்கம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படையான, இயற்கை நீதிக்கான நடைமுறைகளைக் கூட பின்பற்றவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், வி. சிவஞானம் பெஞ்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். Supreme Court Slams Madras High Court

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share