மனசாட்சி உலுக்கவில்லையா என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Supreme Court slams bulldozer demolitions
2017ல் உத்தரப் பிரதேச அரசு புல்டோசர் கலாச்சாரத்தைத் தொடங்கியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. இந்த புல்டோசர் கலாச்சாரம் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் நடந்து வருகிறது.
இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள வீடுகளை அரசும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையமும் இடித்ததாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 2021 மார்ச் 1ல் எங்கள் வீடுகள் இடிக்கப்படுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மார்ச் 6 அன்று எங்கள் கையில் கிடைத்தது. ஆனால் நாங்கள் சட்ட ரீதியாக நிவாரணம் பெறுவதற்கு கூட கால இடைவெளி கொடுக்காமல் அடுத்த நாளே மார்ச் 7ஆம் தேதி வீடுகளை இடித்துவிட்டனர். எங்களுக்கு நீதியும் உரிய நிவாரணமும் வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இது எப்படி இடிக்கப்பட்டது… இது எங்கள் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. இது சட்ட விரோதமான செயல். மாநில அரசு மற்றும் நகர மேம்பாட்டு ஆணையத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. வீடுகள் இடிப்பு குறித்து அறிவிப்புகள் கிடைத்து, 24 மணி நேரத்திற்குள் எப்படி இடித்தீர்கள். அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறியிருக்கிறீர்கள்.
நாட்டின் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். Supreme Court slams bulldozer demolitions