நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (மே 14) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயமானது வழக்கறிஞர்கள் சேவையையும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது. இதன்படி வழக்கறிஞர்கள் சேவை மீது அதிருப்தி இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம்.
இதற்கு எதிராக பார் கவுன்சில், டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு,
“வழக்கறிஞர்கள் தொழில் என்பது தனித்துவமானது. அதனை வேறு எந்த தொழிலுடனும் ஒப்பிட முடியாது. தொழில் மற்றும் வர்த்தகம் என்பது வேறுபட்டது.
எனவே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிறைய கல்வி அறிவு, திறமை மற்றும் மன வலிமை என்பது தேவை. இந்த தொழிலில் ஒருவருடைய வெற்றி என்பது பலதரப்பட்ட காரணிகளை சார்ந்ததாக அமையும்.
எனவே வழக்கறிஞர் தொழிலை வணிகத்துடன் தொடர்புபடுத்தி நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. கிளையண்ட்ஸுக்கும் வழக்கறிஞர்களும் இடையிலான உறவு என்பது தனித்துவமான பண்புகளை கொண்டது.
வழக்கறிஞர்கள் என்பவர்கள் தங்கள் கிளையண்ட்ஸின் முகவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு கடமை உள்ளது. கிளையண்ட்ஸை மதிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.1799-ல் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்பட்ஸ்… என்ன மாடலா இருக்கும்?