கோவை ஈஷா யோகா மையத்தில் விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) தள்ளுபடி செய்தது. supreme court says no coercive
சத்குருவின் ஈஷா அறக்கட்டளை கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 2006 – 2014 ஆண்டுகளுக்கிடையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அதிகாரிகளை தடை செய்தது எது? அதற்கு உங்கள் விளக்கம் என்ன?
தமிழக அரசு இந்த விவகாரத்தினை திடீரென கொண்டு வந்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தினால் சாதாரண மனிதர்கள் எங்கே போவார்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 2006 – 2014-க்கு இடையில் எழுப்பப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து சர்ச்சைக்குரிய விளக்கம் அளிக்கும் நோட்டீஸை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “யோகா மையம் கல்வி நிறுவனம் அல்ல என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ” ஈஷா அறக்கட்டளை அனுமதிக்காக விண்ணப்பம் செய்த போது அங்கு கட்டடம் கட்டப்படுவதாக இருந்தது. எனினும் 2012-ஆம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்டது. அது சுற்றுச்சூழல் தடையின்மை சான்றுக்கு உட்பட்டது என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என்றனர்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “அந்த பயிற்சி மையமானது கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனத்தின் வகைப்பாட்டில் வருவதால் மத்திய அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் தடையின்மை சான்று தேவையில்லை என்று அதிகாரிகள் ஈஷா பவுண்டேஷனிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
ஈஷா அறக்கட்டளையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அறக்கட்டளைக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களும் உள்ளன. எங்களிடம் நகராட்சி மற்றும் பிற அனைத்து ஒப்புதல்களும் உள்ளன.
அவர்கள் சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஈஷா யோகா மையத்தில் 20% மட்டுமே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீதமுள்ள 80% பசுமையானது. இது இந்தியாவின் சிறந்த யோகா மற்றும் தியான மையங்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்கிறோம். ஈஷா யோகா மையத்திற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கக்கூடாது.
எதிர்காலத்தில் ஈஷா அறக்கட்டளை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால், முறையான அனுமதி வாங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். supreme court says no coercive