பாலியல் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Supreme Court reprimands Allahabad High Court judge
உத்தரப் பிரதேச மாநிலம் கசகங்ச் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் ஆடையை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்தது. இன்று (மார்ச் 26) நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவு அவரது கவனக்குறைவையே காட்டுகிறது. இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது. மனிதாபிமானமற்ற அணுகுமுறை. நீதிபதிக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடுகிறோம்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அலாகாபாத் உயர்நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். Supreme Court reprimands Allahabad High Court judge