முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதாவது ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்தசூழலில் நிபந்தனைகளை தளர்த்த கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
அதில், “உச்ச நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறேன். அதனால், ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநா் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணை தேதியிலும் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பில், சாட்சிகள் மீது செந்தில் பாலாஜி தனது ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று (டிசம்பர் 8) தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஸி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமலாக்கத் துறை துணை இயக்குநர் முன் ஆஜராக வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று கூறினார்.
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், ‘குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி நிபந்தனைகளை தளர்த்த கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், வாரத்துக்கு இருமுறை ஏன் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும். வார வாரம் திங்கள், வெள்ளியில் அவர் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருகிறார். உங்கள் அதிகாரியுடன் அமர்ந்து டீ குடிக்கிறார். இது அவசியம் தானா?
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திங்கள் வெள்ளியில் உங்கள் அலுவலகத்துக்கு அவர் வந்திருக்கிறார். அப்போது உங்கள் அதிகாரி அவருக்காக காத்திருப்பதும் தண்டனைக்கு சமம் தான்” என்று கூறினர்.
மேலும், “தேவைப்படும் போது மட்டும் விசாரணைக்கு அழைக்கலாம். அப்போது அமலாக்கத் துறை துணை இயக்குநர் முன் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் . அவருக்கு முன்கூட்டியே அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும்.
அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம்.
அதேசமயம் செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடைஞ்சல் செய்தால் அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தை நாடலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
