கோவில் நிலம் அபகரிப்பு: மு.க. அழகிரி மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்!

Published On:

| By Mathi

MK Azhagiri

நில அபகரிப்பு வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி, தயா பொறியியல் கல்லூரியை 2011-ம் ஆண்டு தொடங்கினார். அந்தக் கல்லூரிக்காக அறநிலையத்துறை நிர்வகித்து வரும் விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தார் மு.க.அழகிரி என்பது புகார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் அடிப்படையில் 2014-ம் ஆண்டு மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை ரத்து செய்ய கோரிய மு.க. அழகிரியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிராகரித்தது. இதனையடுத்து மாவட்ட நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தை மு.க. அழகிரி நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கை ஏற்றுக் கொண்டு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து அழகிரியை விடுவித்தது.

ADVERTISEMENT

இதனிடையே இந்த உத்தரவுக்கு எதிராக மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது இவ்வழக்கில் இருந்து தம்மை முழுமையாக விடுவிக்க கோரி அழகிரி மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம், அழகிரியின் மனுவை டிஸ்மிஸ் செய்தது.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் மு.க.அழகிரி. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மு.க. அழகிரியின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share