நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் நீதிபதி யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சென்ற போது, நீதிபதி வீட்டு ஸ்டோர் ரூபில் கட்டுகட்டாக 500 ரூபாய் தாள்கள் இருந்தன.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உள் விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உண்மை என்று தெரிவித்தது. இந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார்.
இந்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.சி.மாசி, “உள்விசாரணை குழுவும், அக்குழு பின்பற்றிய நடைமுறையும் சட்டவிரோதமானது அல்ல. தலைமை நீதிபதி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல.
பதவியில் இருக்கும் நீதிபதியின் செயல்பாடுகளை விசாரணை செய்ய, உள் விசாரணை குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை” என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
