ஜாமீனை நீட்டிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரச்சாரம் செய்வதற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் கண்டிப்பாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால ஜாமீனில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம், பேரணி, பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனை நீட்டிக்க கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
“ஒரே மாதத்தில் 7 கிலோ வரை எடை குறைந்துவிட்டதாகவும் இது தீவிர மருத்துவ பிரச்சனையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பெட் – சிடி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்வதற்கு மேலும் 7 நாட்கள் ஜாமீனை நீட்டிக்க வேண்டும்.
இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே வாரத்தின் முதல் நாளான ஜூன் 3ஆம் தேதி அனைத்து சோதனைகளும் மேற்கொண்டு விட்டு ஜூன் 9ஆம் தேதி கெஜ்ரிவால் சிறைக்கு திரும்புவார்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நேற்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன் அமர்வு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்ச நீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ம் தேதி வரை மட்டும்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்சநீதிமன்ற பதிவாளர், வேண்டுமானால் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம். இது, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் கால அவகாசம் என்பது இன்னும் மூன்று தினங்களுக்கு மட்டுமே உள்ளது.
ஜாமீன் நீட்டிப்பு மனுவை அவசர வழக்காக பட்டியலிட உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கும் நிலையில், இது கெஜ்ரிவாலுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.