அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 2) விசாரிக்க மறுத்துள்ளது.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா “நீங்கள் ஏன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
ஹேமந்த் சோரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “மாநில முதலமைச்சர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம். கைது நடவடிக்கை என்பது சட்டவிரோதம்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “நீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது. உயர்நீதிமன்றங்கள் என்பது அரசியலமைப்பு நீதிமன்றங்கள். ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநருக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
பாஜக தலைமையில் கூட்டணி என்னாச்சு? மீண்டும் தமிழகம் வரும் பி.எல். சந்தோஷ்