ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மட்டும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. Supreme Court Questions Authorities After 14 NEET Students Die
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்த, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும் நீட் நுழைவுத் தேர்வில் உரிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவஙகள் தொடருகின்றன.
இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நூற்றுக்கணக்கான நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த பயிற்சி மையங்களில் தங்கி படித்து வரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்தும் வருகின்றன. நடப்பாண்டில் மட்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 14 மாணவர்கள், கோட்டா நகரில் தற்கொலை செய்து கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் முன்னிலையில், கோட்டா தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது இல்லை? கோட்டாவில் இதுவரை எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? மாணவர்களின் தற்கொலைக்கு என்னதான் காரணம்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.
மேலும் கோட்டா நகர போலீஸ் அதிகாரி ஜூலை 14-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.