அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 – 2015 காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது.
சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் 47 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகன் மனுத்தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக போக விரும்புவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தர்மராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டது. பல கட்டங்களாக நடந்து வந்த வழக்கில் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு இன்று (செப்டம்பர் 8) தீர்ப்பளித்தது.
அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகாரை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
சமரசம் செய்வதால் மட்டும் குற்றவாளி இல்லை என்று கருதமுடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலை.ரா
