வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது முரண்பாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டவர்களின் பெயர் பட்டியலை விளக்கத்துடன் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இந்திய பெண்களின் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீது இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படாததால் பீகாரில் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது.
அதைத்தொடர்ந்து 2026 ல் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழகத்திலிருந்து ஆளும் கட்சியான திமுகவும் மனு தாக்கல் செய்தது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘எஸ் ஐ ஆர் பணியை மேற்கொள்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளுக்கு எதிரானது.
இந்தப் பணிகள் மூலம் உண்மையான வாக்காளர்கள் பெருமளவில் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அக்டோபர் 2024 முதல் ஜனவரி 2025 வரை சிறப்பு சுருக்கத் திருத்த பணி முடிக்கப்பட்டு அதன் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும் தகுதியற்ற பெயர்கள் நீக்கப்பட்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விரிவான முறையில் மீண்டும் ஒரு முறை புதிய சரிபார்ப்பை நடத்துவதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தமிழகத்தில் 1.7 கோடி வாக்காளர்களின் பெயர்களில் முரண்பாடு இருப்பதாக கண்டறிந்து தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உளளதாகவும், திடீரென இவ்வளவு பேருக்கு நோட்டீஸ் அனுப்பினால் அவர்கள் குழம்பிவிடுவார்கள் என்றும், அதேசமயம் அவர்கள் சரியான பதில் அளிக்காவிட்டால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (ஜனவரி 29) விசாரித்த தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் ஜாய்மல்யா பக்சி, “வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் வெளிப்படையை தன்மையை உறுதி செய்ய வேண்டும்” என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அதோடு, தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முரண்பாடு உள்ள வாக்காளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இந்தப் பட்டியல் வெளியான நாளிலிருந்து பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வந்தோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவோ தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அந்த பட்டியலில் உங்கள் பெயரில் எதற்காக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கான காரணமும் சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி எஸ் நாயுடு, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளுக்கான காரணங்களை பொதுவெளியில் அறிவிப்பது ஒருவருடைய தனிப்பட்ட ரகசியத்தை பாதிக்கும் என்று வாதம் முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் என்ன காரணம் சொல்லப்பட்டுள்ளதோ அந்த காரணத்தை சுருக்கமாக பொதுவெளியில் வெளியிடும் பட்டியலில் இடம்பெறச் செய்யலாம். இதில் ரகசிய காப்பு மீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது எந்தவித இடையூறும் இன்றி சுமுகமாக நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருப்பதையும் இந்த முழு செயல்முறையையும் எவ்வித தடையும் இன்றி சுமூகமாக நடப்பதையும் காவல்துறை தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றைய உத்தரவின் மூலம் மேலும் 10 நாட்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த பணி நாளையுடன் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
