மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சியங்கள் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜாமீன் வழங்கிய பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதால், விசாரணை பாதிக்கும். இதனால் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட வித்யாகுமார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “நாங்கள் ஜாமீன் தருகிறோம், மறுநாளே நீங்கள் போய் அமைச்சராகிறீர்கள். ஒரு மூத்த கேபினட் அமைச்சராக உங்கள் பதவியால், சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டது சாட்சிகள் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக பாலாஜி சிறையில் இருந்தபோதும், குறிப்பிடத்தக்களவில் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதி ஓகா, “இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக கூறியதால் நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை.
ஆனால், தற்போது வரை பதிலளிக்கவில்லை. தமிழக அரசின் இந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது. நீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிக்க வேண்டாம்” என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி ஓகா தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி அபய் ஓகாவிடம், கபில் சிபல் மன்னிப்பு கோரினார்.
அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு மற்றும் சாட்சியங்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எல்லா விஞ்ஞானிகளும் இங்கதான் இருக்காங்க… சிங்கிள் சீட் ட்ரோன் ரெடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள்… இரவோடு இரவாக சிறை மாற்றம் – பின்னணி என்ன?
Comments are closed.