“எப்படி ரிட் மனு தாக்கல் செய்தீர்கள்?” :  ED வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

SC questioned to tn govt

மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. SC questioned to tn govt

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்து அதன்மூலம் வந்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. கலெக்டர்கள் சார்பிலும் ED சம்மனை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை சம்மனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 23) நீதிபதிகள்  பெலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்தது? இதனால் மாநிலத்துக்கு என்ன பாதிப்பு இருக்க போகிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்போகிறோம்” என நீதிபதி திரிவேதி கூறினார்.

தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, “ரிட் மனுவை ஒரு மாநிலம் தாக்கல் செய்வதற்கு சட்டப்படி எந்த தடையும் இல்லை” என்று வாதிட்டார்.

“அமலாக்கத் துறை மதுரை மண்டல அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறது. அது நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் நிலுவையில் இருக்கிறது. அதில், அங்கித் திவாரி வழக்கு விவகாரத்தில் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. எப்.ஐ.ஆர் உட்பட முக்கிய ஆவணங்களை பெற முடியவில்லை என்று அமலாக்கத் துறை மாநில அரசு மீது குற்றம்சாட்டி அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 32ஆவது பிரிவின் கீழ் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது” என சுட்டிக்காட்டினார் முகுல் ரோத்தகி.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி திரிவேதி, “இந்த வழக்கில் அரசு எப்படி அக்கறை கொண்டுள்ளது” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, அமலாக்கத் துறை சம்மன்களை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, “மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட முறையில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால் மாநில அரசோ அல்லது அதன் செயலாளரோ கூடாது” என்றார்.

இதற்கு, “மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என அமித் ஆனந்த் திவாரி வாதாடினார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, “மாவட்ட ஆட்சியர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் சாட்சிகள் தான். அவர்களிடம் தகவல்களை பெற விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. அதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை” என்று வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதி திரிவேதி, “மாவட்ட ஆட்சியர்கள் அரசு ஊழியர்களாக பதிலளிக்க வேண்டும். PMLA இன் பிரிவு 50, இதுபோன்று ஆரம்பகட்ட விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது” என கூறினார்.

இதற்கு முகுல் ரோத்தகி, “சம்மன் அனுப்பி அழைக்கப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல” என பதிலளித்தார்.

அப்போது, “அவர்களை குற்றவாளிகள் என்று யார் சொன்னது?. அமலாக்கத் துறை தகவல்களை மட்டும்தான் கேட்கிறது. அவர்கள் விசாரணை அமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டாமா?” என நீதிபதி திரிவேதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த முகுல் ரோத்தகி, “எந்த குற்றங்களும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்கள் அல்ல எனும் போது அமலாக்கத் துறை அதிகார வரம்பு இல்லாமல் செயல்படுகிறது” என தெரிவித்தார்.

“எனினும், நான்கு எஃப்ஐஆர்களில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அட்டவணையில் சேர்க்கப்பட்ட குற்றங்கள் உள்ளன, அதன் அடிப்படையில் வழக்குப் (ECIR) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் அமலாக்கத் துறைக்கு விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறது” என நீதிபதி கூறினார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடுகையில், “இந்த வழக்கு அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது பிப்ரவரி மாதம் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழக அரசு சார்பில் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும். சம்மன் அனுப்பப்பட்டுள்ள கலெக்டர்களுக்கும் எப்ஐஆருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கூட்டாட்சி முறையை ஒடுக்க அமலாக்கத் துறை முயற்சிக்கிறது. இந்த ரிட் மனுவை மாநில அரசு தாக்கல் செய்தது தொடர்பான காரணங்களை திங்கள் கிழமை கூறுகிறேன்.

மாநில அரசுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கை வரும் 26ஆம் தேதி திங்கள் கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அறிமுக போட்டியில் அதகளம்… கொண்டாடும் ஆர்.சி.பி ரசிகர்கள் : யார் இந்த ஆகாஷ் தீப்?

இந்த இடங்களுக்கு மழை உண்டு: வானிலை மையம்

இந்த மாடல் ஒன்ப்ளஸ் போனுக்கு… முழு பணமும் ரிட்டர்ன்!

SC questioned to tn govt

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share