டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ கைது செய்த வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியுள்ளது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ஆம் தேதி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார். இந்தநிலையில், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜூலை 12 -ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், ஜூன் 26-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந்தநிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினர். மேலும், 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.
அமலாக்கத்துறை, சிபிஐ பதிவு செய்த இரண்டு வழக்குகளிலும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் திஹார் சிறையில் இருந்து இன்று வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரேடியாக உயர்ந்த தங்கம்… நகைப்பிரியர்கள் ஷாக்! – சவரன் எவ்வளவு தெரியுமா?
ஸ்ருதிக்கு நடந்த துயரம் கற்பனைக்கு எட்டாதது!- நடிகர் மம்முட்டி வேதனை!