டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 27) ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் மூத்த தலைவருமான கவிதா கடந்த மார்ச் 15-ல் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவை சிபிஐ ஏப்ரல் 11.-ல் கைது செய்தது.
இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “இந்த வழக்கில் 493 சாட்சிகள் இருக்கிறார்கள். விசாரணையை விரைவில் முடிப்பது என்பது சாத்தியமற்றது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். தொடர்ந்து கவிதாவை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…