ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 19) முடித்து வைத்தது.
தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு ஆகியவற்றுக்கு இடையே தொடர்ச்சியாக இருக்க கூடிய சுண்ணாம்பு திட்டுக்கள் ஆதாம் பாலம் என்றும், ராமர் சேது பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ராமர் கட்டிய பாலம் என்று நம்பப்படும் இந்த மணற்திட்டு பகுதியை ஆழப்படுத்தி மன்னாரை பாக் ஜலசந்தியுடன் இணைக்கும் வகையில் 83 கி.மீ நீளமுள்ள கப்பல் வழித்தடத்தை சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்ற பெயரில் உருவாக்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சித்தது.
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில இந்து மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி கடந்த 2007ம் ஆண்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு சேது சமுத்திர திட்டத்தை முற்றிலுமாக கைவிட்டது.
எனினும் சேது சமுத்திர திட்டத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
மாறாக, “தேசத்தின் நலன் கருதி ராமர் பாலத்தை பாதிக்காமல் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்திற்கு மாற்றாக வேறு புதிய திட்டம் குறித்து இந்திய அரசு ஆராய்கிறது” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு பிரமாணப் பத்திரம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்தது.
எனினும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய சுவாமியின் நீண்டகால மனுவுக்கு பதிலளிக்க கோரி மத்திய அரசுக்கு நான்கு வார கால அவகாசத்தை கடந்த நவம்பர் 10ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியது.
இதற்கிடயே சமீபத்தில் ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.
இதனை அடிப்படையாக கொண்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சட்டசபையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி மீதான வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறது. இதில் விரைவில் முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த பதிலை ஏற்காத சுப்பிரமணியன் சுவாமி தரப்பு, ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க விரும்புகிறதா? இல்லையா என்பதை மத்திய அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று கோரியது.
ஆனால் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன் மத்திய அரசு, இதில் முடிவு எடுக்காவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
