மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் மீதான நடவடிக்கையை தடுக்க ஆளுநரால் முடியாது என பஞ்சாப் அரசு – ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. supreme court final judgement
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் ’தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
அதில், ”அரசியல் சாசனத்தின் 200 ஆவது பிரிவின் கீழ் மசோதா மீதான ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைக்க முடிவு செய்தால், அதனை மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீதான நடவடிக்கையாக ஆளுநருக்கு மூன்று செயல் முறைகள் உள்ளன.
அதன்படி மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கலாம் அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம் அல்லது மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் செய்தியுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம்.
திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டசபை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கட்டுப்பட வேண்டும்.
ஆளுநர் மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் என்பதால், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளால் சட்டம் இயற்றும் வழக்கமான போக்கை கட்டுப்படுத்த முடியாது.
ஜனநாயக பாராளுமன்ற நடைமுறையில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது. supreme court final judgement
அடையாள பதவியில் இருக்கும் ஆளுநருக்கு தனியாக எந்த அதிகாரமும் இல்லை. அரசும் அதன் அமைச்சர்களும் சொல்வதன் படி தான் ஆளுநர் செயல்பட முடியும்.
ஆளுநர் அவ்வாறு செயல்படவில்லை என்றால், அது சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயலாக கருதப்படும்” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருவண்ணாமலை தேர் திருவிழாவில் மின்கசிவு? : எடப்பாடி கண்டனம்… கோயில் நிர்வாகம் விளக்கம்!
