திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தம்மை பலாத்காரம் செய்தார் சீமான் என்பது 2011-ல் போலீசில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். இதனை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி விசாரித்தது. அப்போது 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
சீமானின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்றது.
அப்போது, “நடிகை விஜயலட்சுமி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். சீமான் அவரை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்தார். ஆனால் விஜயலட்சுமியை திருமணம் செய்யாமல் வேறு ஒருவரை சீமான் திருமணம் செய்து கொண்டார். இதனால் சீமான் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பொதுவெளியில் விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி என விமர்சித்துள்ளார். இப்படி எல்லாம் சீமான் அவதூறாக பேசக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என நடிகை விஜயலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், “இருவரும் சிறு குழந்தைகள் இல்லை. இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டுள்ளனர். ஆகையால் இருவரும் தாங்கள் பரஸ்பரம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளைத் திரும்ப வேண்டும்.
சீமான், நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கான மனுவை சீமான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் நடிகை விஜயலட்சுமியை எதிர்காலத்தில் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன் என பிரமாணப் பத்திரத்தையும் சீமான் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் சீமானின் மேல்முறையீட்டு மனுவையே பரிசீலனை செய்வோம். சீமான் அப்படி செய்யாவிட்டால் அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை சீமான் மீதான விசாரணைக்கான இடைக்கால தடையையும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
