தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் : திமுக அரசை விமர்சித்த அன்புமணி

Published On:

| By christopher

Supreme Court condemns Tamil Nadu Police: Anbumani criticizes DMK government

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையின் விசாரணை செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை வழங்கும்படி ஆணையிட்டுள்ளது. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று ஆகும்.

அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியின் தாய் நடத்தை மீதே சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தான் தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஆகும். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் காவல்துறையின் தவறுகளுக்கு துணை போகிறது என்று தான் பொருளாகும்.

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று கொக்கரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை இன்று வரை கைது செய்யாத காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இதிலிருந்தே காவல்துறை எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது; எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பழிவாங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் காவல் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மிஸ் யூ டீஸர்… மீண்டும் ரொமான்ஸ் மோடுக்கு திரும்பிய சித்தார்த்

இப்படி செய்தால், சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேற பாகிஸ்தான் திட்டம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share