”ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை… மோசமான சாலைக்கு சுங்கக்கட்டணமா?” – உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!

Published On:

| By christopher

supreme court condemns nhai on damage roads

“ஒரு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு மோசமான சாலையை வைத்துக் கொண்டு எப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிகிறது?” என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கடுமையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சித்துள்ளார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாலியேக்கரா சுங்கச்சாவடியில் எடப்பள்ளி-மன்னுத்தி பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக எழுந்த புகாரை ஏற்று, அங்கு நான்கு வாரங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க கேரள உயர் நீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டது.

ADVERTISEMENT

தனது தீர்ப்பில், “சுங்கக் கட்டணத்தை பொதுமக்கள் கடமையாக செலுத்தும்போது, சீரான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) பணி முக்கியமானது. இது பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பொது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த நம்பிக்கை மீறப்படும்போது, சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் சட்டப்பூர்வ உரிமையை பொதுமக்கள் மீது திணிக்க முடியாது” உறுதிப்பட தெரிவித்தது.

இதனை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் முன்பு நேற்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது என்.ஹெச்.ஏ.ஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”சுங்க வசூலை நிறுத்துவது நியாயமற்றது மற்றும் நிதி ரீதியாக தீங்கு விளைவிக்கும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு நாளும் ரூ.50 லட்சம் நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று வாதிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “பாலியேக்கரா சாலையின் மோசமான நிலையை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். பாதுகாப்பு வாகனம் உடன் இருந்தும் நானே அந்த சுங்கச்சாவடியில் சிக்கிக்கொண்டேன். அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. இவ்வளவு மோசமான சாலையில் எப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிகிறது” எனக் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும், “கடந்த பிப்ரவரி முதலே உயர்நீதிமன்றம் இந்த சிக்கலை எழுப்பி வருகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் கட்டண வசூலுக்கு தடை விதித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து தவறாமல் கட்டணம் வசூலித்த போதிலும், NHAI சரியான சேவைகளை வழங்கத் தவறியுள்ளது. மேம்படுத்தப்பட வேண்டிய சர்வீஸ் சாலைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது கண்கூடாக தெரிகிறது. மேல்முறையீடு செய்து நேரத்தை வீணாக்காமல் உருப்படியாக எதையாவது செய்யுங்கள்” என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கடுமையாக சாடினார்.

அப்போது மற்றொரு நீதிபதியான வினோத் சந்திரன், அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் தனது மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் போன விரக்தியில் ஒருவர் நடத்திய போராட்டம் குறித்த செய்தியையும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, நெடுஞ்சாலையில் 2.85 கி.மீ தூரத்திற்கு மட்டுமே போக்குவரத்து நெரிசல் உள்ளது. அதற்கு காரணமாக சுங்கச்சாவடிக்கு அருகில் சில சந்திப்புகள் அமைந்துள்ளன. அவை NHAI இன் பொறுப்பின் கீழ் வராது. இதற்கான தகுந்த வரைபடங்களை வழங்குவதாக கூறி, இந்த வழக்கை ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை பட்டியலிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share