உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு பல மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் உள்ளதால் நீதித்துறை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய திறமையான நீதிபதிகளை இழந்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் கால தாமதம் செய்து வருவதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்ஷு துலியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர், “கொலீஜியம் வழங்கிய பட்டியலில் இருந்து மத்திய அரசு சில நீதிபதிகள் பெயர்களை நீக்குவது மிகவும் சங்கடமானது” என்று வாதிட்டார்.
பல பிரகாசமான சட்ட மனப்பான்மை கொண்டவர்கள் நீதிபதிகளாக பணியாற்ற தியாகம் செய்ய உள்ளனர். ஆனால் மத்திய அரசு கொலீஜியம் நடைமுறையை பின்பற்றாததால் அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா குறிப்பிட்டனர்.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜராகி, “பல வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக தயங்குகிறார்கள். காரணம் கொலீஜியத்தின் பரிந்துரையை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஏற்படுத்தும் கால தாமதம் தான். நீதிமன்றம் இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய நேரமிது” என்ற வாதத்தை முன் வைத்தார்.
2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொலீஜியத்தால் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 70 பெயர்கள் நிலுவையில் இருப்பதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “உயர்நீதிமன்ற நீதிபதிகளின் 70 பணியிடங்கள் காலியாக உள்ளது. நீதிபதிகள் பணியிடங்கள் தொடர்பாக கொலீஜியத்தின் பரிந்துரைகளை பெற்றவுடன் சில அடிப்படை செயலாக்கங்களைச் செய்து அதை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும். அதைக்கூட நீங்கள் செய்யவில்லை. நிலுவையில் உள்ள நீதிபதிகள் மீது மத்திய அரசுக்கு ஆட்சேபம் ஏதேனும் இருந்தால் அதனை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நீங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.
நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். கொலீஜியம் பரிந்துரைத்த 26 நீதிபதிகள் இடமாற்றங்கள் குறித்து அரசிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. உயர்நீதிமன்றங்களில் 9 நீதிபதிகள் பணியிடங்களுக்கு கொலீஜியம் புதிதாக அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதலும் வழங்கவில்லை அதனை திருப்பியும் அனுப்பவும் இல்லை. கொலீஜியத்தால் அனுப்பப்படும் பரிந்துரைகளை மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, “மிகவும் முக்கியமான நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதியை நியமிக்க கொலீஜியம் செய்த பரிந்துரை நிலுவையில் உள்ளது. உதாரணமாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் அரசுக்கு அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவில்லை
நீதிபதிகளை ஏன் இடமாற்றம் செய்யவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிக்கும் வரை 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்போம். இந்த விவகாரத்தில் அட்டார்னி ஜெனரல் நேரம் கேட்பதால் நிறைய பேச விரும்பவில்லை. அடுத்த முறை நிறைய பேசுவோம்” என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்ஷு துலியா ஒத்திவைத்தனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் உத்தரவு!
