தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ஜாபர் சேட்டின் மனைவிக்கு எதிரான குற்றப் பத்திரிகையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாபர் சேட். இவரது மனைவி பர்வீன்.
2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஜாபரின் மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பர்வீன் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பர்வீன் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
பர்வீன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துர்கா சங்கர், “இந்த வழக்கு முற்றிலும் அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இன்றியே லஞ்ச ஒழிப்புத் துறையால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே குற்றப் பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் முன்னிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ”வீட்டு மனை ஒதுக்கீடு விவகாரத்தில் பர்வீன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
”அரசியல் உள்நோக்கங்களுக்காக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் எவ்வித அரசியல் உதவியும் இன்றி தனித்து நின்று சட்டப்படி போராடி வென்றிருக்கிறார்” என்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்