மத உணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 26) இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
’இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது’ என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலில் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து சிறுபான்மையினர் குறித்து அவதூறாகவும், இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அண்ணாமலை பேசியதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அண்ணாமலை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது.
நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து, இந்த சம்மன் மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனது மீதான புகார் மனுவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாமலை மீதான புகார் மனுவை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அண்ணாமலை. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பதில் அளிக்கவும், அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காங்கிரஸ் சிட்டிங் எம்.பி-களுக்கு மீண்டும் வாய்ப்பு? : கட்சிக்குள் சலசலப்பு!
பாஜக உடன் தமாகா கூட்டணி: அதிமுக ரியாக்ஷன்!
IND vs ENG: 4-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி… தொடரையும் கைப்பற்றியது இந்தியா
