ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Minnambalam

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 11) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு காந்திஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் இதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து, இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு முன்பு வழக்கை விசாரிக்க மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் அமர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மார்ச் 3,17 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இறுதி விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ” சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகத் தான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரே நாளில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி தர முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கமுடியும்.

பேரணிக்கு முழு தடைவிதிக்கவில்லை. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஆர்.எஸ்.எஸ் பேரணியை நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ளலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

மோனிஷா

திமுக – விசிக கூட்டணி தொடருமா? திருமா பதில்!

தங்கம் விலை: மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்தது!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share