அதிமுக அலுவலகத்திலிருந்த ஆவணங்களைக் கொள்ளையடித்ததாக ஓபிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஈபிஎஸ் தரப்பினர் 22 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஓபிஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று (ஜூலை12)வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் நேற்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே வேளையில், ஓபிஸ் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் ராஜீவ்காந்தி, கீழ்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இது குறித்து ஈ2 ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த தலா 200 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வழக்கில் தொடர்புடைய திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சீனிவாசன் (40), ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் பாலச்சந்திரன் (34) உட்பட ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை பாபு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதன்படி சட்டவிரோதமாகக் கூடுதல், ஆயுதங்களுடன் கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஈபிஎஸ் தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அலுவலக தாக்குதலைத் தொடர்ந்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் அளித்து வரும் நிலையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
– கிறிஸ்டோபர் ஜெமா