செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு மனு) வழக்கில் இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்பை அளித்துள்ள நிலையில்… மூன்றாவது நீதிபதியை விரைவில் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை எதிர்த்தும், அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற கோடை கால அமர்வு நீதிபதிகளான சூர்ய காந்த், சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.
இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துவருவதை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு 25 ஆவது வரிசையாக வந்த நிலையில் இங்கே சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் வேறுபட்ட தீர்ப்பு அளித்திருந்தனர்.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில், “ உயர் நீதிமன்ற அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. ஆனால் எங்கள் கோரிக்கை அவரை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்பதுதான். இவ்வழக்கில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வழக்கின் ஆதாரங்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருக்கிறது. ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஆட்கொணர்வு மனுவில் ஏற்படும் சட்ட கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றமே தீர்வு காணவேண்டும்” என்று மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.
செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ,முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினார்கள்.
“உயர் நீதிமன்றத்தில் இன்று இருவேறு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளை அளித்துள்ளனர்.அதனால் வழக்கு 3 ஆவது நீதிபதிக்கு செல்ல இருக்கிறது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை புறந்தள்ளிவிட்டு உச்ச நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? உச்சநீதிமன்றம் கடந்த முறையே இதைத்தான் சொல்லியிருக்கிறது. law of nature படி இதுவாகத்தான் இருக்க முடியும்” என்று வாதிட்டனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் எவ்வளவு விரைவாக மூன்றாவது நீதிபதியை நியமிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நியமிக்க வேண்டும். விரைந்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது
மேலும்… சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகே இவ்வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
எனவே இந்த வழக்கு விவகாரத்தில் மூன்றாவது நீதிபதியின் முடிவுக்காக உச்ச நீதிமன்றம் காத்திருக்கும்.
-வேந்தன்