எடப்பாடிக்கு ஒரு நீதி… திமுகவுக்கு ஒரு நீதியா?: நீதிபதி மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி

Published On:

| By Kavi

அமைச்சர்கள் தொடர்பான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுதலை செய்து கீழமை நீதிமன்றங்கள்  பிறப்பித்த உத்தரவை கடுமையாக விமர்சித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அட்வகேட் ஜெனரல் மற்றும் திமுக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்திருக்கிறார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முதல்வரிடம் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மின்னம்பலத்தில் அமைச்சர்கள் விடுதலைக்கு எதிராக நெற்றிக் கண் திறந்த நீதிபதி… ஸ்டாலின் ரியாக்‌ஷன்! என்று தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்

இந்த ஆலோசனையில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முதல்வர் ஸ்டாலினிடம்,  “என் மீது நீதிமன்ற அவமதிப்பு போட்டாலும் பரவாயில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து நாம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். ஒரு பக்கம் ஆளுநர் நமக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார், இன்னொரு பக்கம் நீதித்துறையில் இருந்தும்  இதே போல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இதற்கு நாம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.  நான் கடுமையாக விமர்சனம் செய்கிறேன்” என்று ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

ADVERTISEMENT

சரி, கவனமாக பேசுங்கள் என்று அறிவுறுத்திவிட்டு ஸ்டாலின்  சுற்றுப் பயணத்துக்கு கிளம்பிவிட்டார்.

ADVERTISEMENT

இந்த பின்னணியில்  இன்று (ஆகஸ்ட் 24) மாலை ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசிய ஆர்.எஸ்.பாரதி, “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எப்படி எல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்பது நாடறியும். அரசுக்கு எதிராக தீர்ப்பை வழங்கினார் என்பதற்காக சீனிவாசன் என்கிற நீதிபதி வீட்டின் குடிநீர் இணைப்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதேபோன்று சத்யதேவ் என்ற நீதியரசர் வீட்டிலும் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது.

நான் போட்ட டான்சி வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பா, ஜெயலலிதாவின் மனுவை ஏற்காமல் உத்தரவு போட்டதன் காரணத்தினால் 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி பந்தாடப்பட்டார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த நீதிபதி ராஜினாமா செய்துவிட்டு சென்றார். இதுபோன்ற  சம்பவங்களை எல்லாம் திமுக கண்டித்திருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

தொடர்ந்து அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்திருக்கிறார்.

அவர் முன்பு, நான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்குத் தொடர்ந்தேன். டெண்டரில் 3600 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக 2018ல் ஊழல் வழக்குத் தொடர்ந்தேன்.

அன்று விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. உடனே எடப்பாடி உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்.

இவ்வழக்கு இதே நீதிபதி முன்பு மீண்டும் வந்த போது, அவர் கொடுத்த தீர்ப்பு அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க கூடாது என்று 18.7.2023 தெரிவித்த நீதிபதி, ‘ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தங்கள் அரசியல் போட்டியில் ஸ்கோர் செய்வதற்கு நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் டிவி சேனல்களில் டாக் சோவாக விவாதிக்கப்படுகிறது” என்று சொன்னார்.

3600 கோடி ஊழல் வழக்கில் இப்படி சொன்ன அதே நீதிபதி இரண்டு வாரம் கழித்து வெறும் 44 லட்சம் ரூபாய் வழக்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது தாமாக வழக்கை எடுத்து விசாரித்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்.

பொன்முடி வழக்கில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கு ஒரு வருடம், இரு வருடம் அல்ல பல வருடங்கள் நடைபெற்றது.
இவ்வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இப்படி மாற்றப்பட வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தான் அதற்குரிய உத்தரவு போட வேண்டும்.

இதையெல்லாம் கேலி , கிண்டல் செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. விசாரணை நடத்தி விடுவிக்கப்பட்ட ஒருவரை தாமாக எதற்கு விசாரிக்க வேண்டும்.

அதேபோல 74 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீது வழக்கு போடப்பட்டது. இந்த பணத்தை வைத்து நங்கநல்லூரில் 600Sq-ft நிலம் வாங்கலாம் அவ்வளவுதான். அதுபோன்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது வழக்கில் அந்த 44 லட்ச ரூபாயில் 400Sq-ft நிலம் வாங்கலாம்.

இவர்கள் மீதான வழக்கை விசாரிக்கத்தான் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்போம் என்று நீதியரசர் சொல்லியிருக்கிறார். இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்றார்.

மேலும் அவர் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ அதே அடிப்படையில்தான் அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போதும் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எம்.எல்.ஏ.வாகதான் இருக்கிறார்கள். இந்த நீதிபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்றவர்.

இந்நிலையில் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து  திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது மட்டும் தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்கிறார் என்றால் இது பழிவாங்கும் நடவடிக்கை போல் இருக்கிறது.
இப்படி பாகுபாடு பார்ப்பது ஏன்?. ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோரது மீதான வழக்குகளை விசாரிக்காமல் பொன்முடி உள்ளிட்டோர் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்கிறார்.

இதை நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சொல்வோம்.

திமுக ஆட்சிக்காலத்தில், கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் நீதிபதி வரதராஜன் நியமிக்கப்பட்டார் என்று நான் அன்பகத்தில் பேசியதற்கு இதே நீதியரசர் முன்புதான் பெட்டிஷன் கொடுப்பட்டது. அவர் போட்ட உத்தரவின் படி நான் கைது செய்யப்பட்டேன். கைது செய்யப்படவுடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. எனது பெயிலை கேன்சல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார்கள். அது தள்ளுபடியானது.

இவர் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்ன வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதே நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து 2022ல் கண்டனம் தெரிவித்தது. தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரிக்க அதிகாரம் இருந்தாலும் இதை தவறான முறையில் நீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது என்று இவர் விசாரித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கிறது.

இதையெல்லாம் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்.இறுதி வெற்றி எங்களுக்கு கிடைக்கும் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பழிவாங்கும் நோக்கம் இருக்கிறது. ஒரு சாராரை விட்டுவிட்டு ஒரு சாராரை மட்டும் (pick and choose)  தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவையெல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அல்ல. அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள். 10 ஆண்டுகளாக வழக்குகள் நடந்தது. 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவோம்” என கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

நீதிபதி 3 நாளா தூங்கவில்லை என்று சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தூக்கம் வரவில்லை என்றால் டாக்டரை தான் பார்க்க வேண்டும். நானும் தான் இந்த தீர்ப்பை கேட்டு 7 நாளாக தூங்கவில்லை. “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே” என்ற பாடலை கேட்டேன் தூங்கிவிட்டேன்” என்று விமர்சித்தார்.

ஒரு பக்கம் ஆளுநர் தொல்லை கொடுத்துக்கொண்டிக்கிறார். இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும் போது திமுக மீது களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்குதான் இந்த விளக்கம்” என்றார்.

பிரியா

செஸ் உலகக் கோப்பை: பிரக்ஞானந்தா போராடி தோல்வி!

இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share