தினமும் சாப்பிட்டவுடன் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. சிலருக்கு ஒரு கடலை மிட்டாய் சாப்பிடுவது நிறுத்த முடியாத பழக்கமாகிவிட்டது. வொர்க் ஃப்ரம் ஹோமுக்குப் பிறகு, தற்போது வீட்டிலிருக்கும் நாட்களிலும் மூன்று வேளை சாப்பாட்டுக்குப் பிறகு சிலர் இனிப்பானவற்றை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதா? “உணவு சாப்பிட்ட பிறகு உடனே ஸ்வீட் சாப்பிடும் இந்தப் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. இப்படி இருந்தால் உடலில் ஏதோ சத்துக்குறைபாடு இருப்பதாக அர்த்தம். தினமும் மூன்று வேளைகளும் உணவுக்குப் பிறகு இனிப்பானவற்றைச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமல்ல. அது கொலஸ்ட்ரால் அளவை நிச்சயம் அதிகரிக்கும்.
தவிர கடலை மிட்டாய் சாப்பிடுவதால் கை, கால்களில் வலி வர வாய்ப்பிருக்கிறது. முழுமையான உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதால் உடல் எடையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். எனவே, அதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. என்றோ ஒருநாள் இப்படிச் சாப்பிடுவதில் பிரச்னை இல்லை. தினமும் சாப்பிடுவது, அதிலும் ஒரு முழு பார் அளவுக்குச் சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தேடல் அதிகரிக்கும்போது பேரீச்சம்பழம், அத்திப்பழம், ப்ரூன்ஸ், 80 சதவிகித டார்க் சாக்லேட், எள்ளுருண்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடலாம். இனிப்புத் தேடலைக் கட்டுப்படுத்த பழங்கள்கூட சாப்பிடலாம். கூடவே ஆல்மண்டு பட்டர் எனப்படும் பாதாமிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம்.
பெண்களுக்கு, பீரியட்ஸுக்கு முன்பு இப்படிப்பட்ட இனிப்புத் தேடல் ஏற்படுவது சகஜம். அவர்களும் மேற்குறிப்பிட்டபடியான ஆரோக்கிய சாய்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது. மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏதேனும் சத்துக்குறைபாடு உள்ளதா என்பதற்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுப் பின்பற்றுங்கள். இல்லையென்றால் உங்கள் எடை கூடும்” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.