சண்டே ஸ்பெஷல்: மாம்பழம்…. யார்… யார், எந்த அளவு, எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?

Published On:

| By christopher

இயற்கை, அந்தந்த சீசனில் கொடுக்கும் உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. ஏனெனில், அத்தகைய உணவுகள் மூலம் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். அதன்படி, கோடைக்காலத்தில் மட்டுமே அதிகளவில் விளையும் மாம்பழங்களை இந்த சீசனில் நாம் உட்கொள்வது பயன்தரக் கூடியது. ஆனால், அதிகமாக மாம்பழம் சாப்பிடுவதால், உடலில் உஷ்ணம் ஏற்படக்கூடும். உஷ்ணம் அதிகமானால், கொப்புளம் வர வாய்ப்புள்ளது. மாம்பழத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தும், மாம்பழத்தைச் சாப்பிட்ட பின்னர் மோர் குடித்தும் உஷ்ணம் அதிகரிக்காமல் இருக்கும் வழிமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. இதையெல்லாம் எல்லோரும் எல்லா நேரத்திலும் செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால், மாம்பழத்தைக் குறைவாகச் சாப்பிடும்பட்சத்தில், இந்த வழிமுறைகளைச் செய்யத் தவறினாலும்கூட எந்தச் சிக்கலும் வராது.

மாம்பழத்தை காலை வேளையில் சாப்பிட்டால் காலை உணவைச் சரியான அளவில் உட்கொள்வதில் சிக்கல் வரலாம். இரவில் சாப்பிடுவதால், செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதிய உணவுக்குப் பின்னர் மாம்பழம் சாப்பிடலாம்.

குழந்தைகள் மற்றும் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு, வாரத்துக்கு ஒரு துண்டு மாம்பழம் போதுமானது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருமுறை பெரிய மாம்பழத்தில் பாதி அளவு கொடுத்தால் போதும். இதுவே, சிறிய மாம்பழமாக இருக்கும்பட்சத்தில், முழு மாம்பழத்தைக் கொடுக்கலாம்.

10 – 20 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறிய மாம்பழம் எனில் வாரத்துக்கு 2 – 3 பழங்களைச் சாப்பிடலாம். பெரிய மாம்பழம் எனில், வாரத்துக்கு ஒன்று போதுமானது.

20 – 70 வயதுக்கு உட்பட்டவர்கள், சர்க்கரை பாதிப்பு இல்லாத பட்சத்தில், சிறிய மாம்பழமாக இருந்தால் தினமும் ஒன்று அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் ஒன்று வீதம் சாப்பிடலாம். பெரிய மாம்பழமாக இருக்கும்பட்சத்தில், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டுக்கு மிகாமல் உட்கொள்வது போதுமானது.

70 வயதைக் கடந்தவர்கள், மாம்பழத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டும் வாரத்துக்கு ஒருமுறை உட்கொண்டால் போதும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை நன்கு கழுவி, வாரத்துக்கு ஒரு துண்டு மாம்பழத்தை மட்டும் தோலுடன் அல்லது தோல் நீக்கிச் சாப்பிடலாம். சர்க்கரை பாதிப்பு அதிகமுள்ளவர்கள், மாம்பழத்தைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மாம்பழ பிரியர்கள், அவசியம் தெரிந்திருக்க வேண்டிய எச்சரிக்கை செய்தி ஒன்று இருக்கிறது. பரவலாக நாம் உட்கொள்ளும் பழ வகைகளில், மாம்பழம் மற்றும் பலாப்பழம் ஆகியவை, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டுவதற்கான வாய்ப்பை (Glycemic Index) அதிகம் கொண்டிருக்கின்றன. எனவே, உஷ்ணம் ஏற்படாத வகையில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுக்குச் சற்று அதிகமாக எப்போதாவது மாம்பழம் சாப்பிட்டால் பாதிப்பில்லை. சர்க்கரை பாதிப்பு இல்லாதவர்கள், தினமும் ஒன்றுக்கு மேல் மாம்பழம் சாப்பிடும்பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதிசெய்து கொள்வது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூன்று நாள் தியானத்தை நிறைவு செய்தார் மோடி

Exit Poll 2024: என்டிஏ Vs இந்தியா… யார் யாருக்கு எத்தனை இடங்கள்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share