கோலிவுட்டில் சுந்தர்.சி ஜானர் படங்கள் என தனி ஜானரே உண்டு. கிளாமர், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தையும் சரி வர சேர்த்த மசாலா ஜானர். இப்படி தனக்கென தனி ஜானரையே தமிழ் சினிமாவில் உருவாக்கி வைத்தவர் சுந்தர்.சி. அதில் தற்போது இலவச இணைப்பாக இணைந்தது தான் பேய் ஜானர். அதாவது, நமது லாரன்ஸ் மாஸ்டர் தொடங்கி வைத்த ’குழந்தைகள் கொண்டாடும் குடும்பப் பேய்’ ஜானர். அதனின் விளைவே ’அரண்மனை – 4’.
சரவணன் என்ற வழக்கறிஞராக சுந்தர் சி, அவரது அத்தையாக கோவை சரளாவும், சகோதரியாக தமன்னாவும் நடித்துள்ளனர். தமன்னா தனது காதலனுடன் வேறொரு ஊருக்கு ஓடி செல்கிறாள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள். சரவணன் தங்கைக்கு உதவியாக தமன்னாவின் ஊருக்குச் செல்கிறான். தமன்னாவின் அரண்மனையில் தங்கியிருக்கும் போது சில அதிர்ச்சியூட்டும் ரகசியங்களை சரவணன் கண்டுபிடிக்கிறான். ஆக, சரவணன் எப்படி தமன்னாவின் பிரச்சனைகளை தீர்த்து தனது சகோதரியின் குடும்பத்தை பாதுகாக்கிறான் என்பதே கதை.
ஒரு அப்பாவி பெண் கொடூரமாக கொல்லப்பட்டு, ஆவியாக மாறி ஒரு அரண்மனையில் அலைய, சுந்தர் சியின் கதாபாத்திரம் அந்த ஆவியை கண்டறிந்து அதன் ஆத்மாவை சாந்தி அடைய செய்வதே அரண்மனை ஃப்ரான்சைஸின் வழக்கமான பாணி. அரண்மனை-4ம் இந்த ஸ்டைலிற்கு விதிவிலக்கில்லை, இருப்பினும் இதற்கு முந்திய படங்களைவிட கொஞ்சம் சுவாரஸ்யமான ஃப்ளாஷ்பேக் தான் அரண்மனை-4ன் சிறப்பம்சம்.
ஒருவர் தங்களின் அன்புக்குரியவர்களைக் காக்க எவ்வளவு தூரம் செல்வது என்பதே அரண்மனை ஃப்ரன்சைஸின் முக்கிய கருவாகும். பொதுவாக சுந்தர் சியின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பாரம் இருக்கும். ஆனால் இம்முறை படத்தைத் தன் தோளில் சுமக்கும் தமன்னாவுக்கு உதவி மட்டுமே செய்கிறார் சுந்தர்.சி. அரண்மனை ஃப்ரன்சைஸ், அதன் நடிப்பிற்காக குறிப்பாக அறியப்படாதபோது, தமன்னாவின் செல்வி கதாபாத்திரம் அரண்மனை உலகில் மிகவும் நன்கு வரையறுக்கப்பட்ட பாத்திரம். இருப்பினும் தமன்னாவின் கதாபாத்திரத்தை தாண்டி வேறு எந்த கதாபாத்திரமும் பெரிதாய் மனதில் பதியவில்லை. யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ் என பல காமெடி நடிகர்கள் இருந்தும், க்ளைமேக்ஸ் காட்சிகளை தாண்டி, வேறு இடங்களில் படத்தில் காமெடி எங்கே எனத் தேடும் வகையில் தான் இருக்கிறது.
சமீபத்திய திரைப்படங்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்களை எடுத்துக் கொண்ட சுந்தர்.சி, கவர்ச்சியை பெருமளவில் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஹிப்ஹாப்’ ஆதியின் இசையில், பாடல்கள் பெருமளவில் ரசிக்கும்படி இல்லை. இருப்பினும் பரபரப்பான காட்சிகளையும் பதற வைக்கும் நொடிகளையும் மெருகேற்றி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது ஆதியின் பின்னணி இசை.
குருராஜின் கலை இயக்கம் ஒரு திகிலான அரண்மனையை கண்முன் கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் காடுகளையும் குகைகளையும் காட்டும் காட்சிகள் அபத்தமான செட்டிங் எனத் தெரியும் அளவிற்கு தான் இருக்கிறது. பல இடங்களில் நேர்த்தியில்லாத கிராஃபிக்ஸ் காட்சிகள் உறுத்தலாகவே தெரிகிறது. அதே சமயம் க்ளைமாக்ஸில் பிரமாண்ட சிலைகள் செட், கோயில் செட், அதற்குள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் போன்றவை பிரமிப்பூட்டுகின்றன.
பேய் படத்திற்கு தேவையான திகிலான கட்சிகள், இரவு காட்சிகள் என அனைத்தும் இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் கச்சிதமாக இருக்கின்றன. முக்கியமாக க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளில் அவரின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது. ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பினால் படத்தின் கதையில் இருக்கும் வெறுமையை ஈடுகட்ட முடியவில்லை.
அதே அரண்மனை, அதே பேய், அதே சிரிப்பு வராத காமெடி, உருவமற்ற புகை உருவங்கள், கொடூரமான கொலைகள், பேயை உணரும்/பார்க்கும் குழந்தைகள், ஆவியால் தாக்கப்படும் நகைச்சுவை நடிகர்கள், மர்மமான மம்போ ஜம்போவைத் தூண்டும் கடவுள் மனிதர்கள், சோகமான ஃப்ளாஷ்பேக், கடினமான காட்சி விளைவுகள் மற்றும் நிச்சயமாக, சுந்தர் சியின் ஒரு துப்பறியும் பகுதி-மாஸ் திரைப்பட ஹீரோ அவதாரம், என வழக்கமான எல்லாம் நாம் பார்த்த ஓர்க்கவுட் ஆகாத அதே பாணியில் தான் இருக்கிறது.
ஆக அரண்மனை-4 அதே கதை! அதே வாடகை! யாருக்கும் தெரியும் இதையும் இன்டஸ்ட்ரி ஹிட்டாக்கி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக்குவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷா