தனது சகோதரரும் சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் நிதி முறைகேடு செய்ததாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், சன் டிவி நெட்வொர்க் இன்று (ஜூன் 20) விளக்கமளித்துள்ளது. sun network clarifies dispute between kalanithi
தயாநிதி மாறன், தனது சகோதரரும் சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை கலாநிதி மாறன் முறைகேடாக மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள சன் டிவி நெட்வொர்க்,
“சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் இடையிலான சில விஷயங்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சம்பவங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது.
கட்டுரையில் வெளியான செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை, அவதூறானவை. அவை சட்டத்தால் ஆதரிக்கப்படாத, உண்மையான செய்திகள் அல்ல.
நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் சட்டப்பூர்வ கடமைகளின்படி செய்யப்பட்டுள்ளன என்பதையும், பொது வெளியீட்டிற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களால் அவை முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நிறுவனத்தின் வணிகத்திலோ அல்லது அதன் அன்றாட செயல்பாடுகளிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குதாரர்களின் குடும்ப விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்ட விவகாரங்களை சார்ந்தவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.