முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், இவ்வழக்குகள் நாளை விசாரிக்கப்பட உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.
இதை எதிர்த்து தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கைக் கடந்த ஜனவரி 29ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த சூமோட்டோ வழக்கை விசாரிக்கும் முன் தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்றாரா?’ என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கேள்வி எழுப்பியிருந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தை மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறோம். இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்த பிப்ரவரி 5ஆம் தேதியே, சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரது வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இவ்வழக்குகளை ஒத்தி வைக்கிறேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பிற அமைச்சர்கள் மீதான வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை (பிப்ரவரி 8) பட்டியலிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘லெஜண்ட்’ சரவணின் 2-வது பட இயக்குநர் இவரா?
நேரு இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்: மாநிலங்களவையில் காங்கிரசை கடுமையாக சாடிய மோடி