கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த துயரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திடீரென தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் குமார், த.வெ.க. ஈரோடு மாவட்ட செயலாளர் மதியழகன்ஆகிய 4 பேரையும் வரும் 29-ந் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தவெக தலைவர் விஜய் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், முறைப்படியான சம்மன் அனுப்பாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமா? மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்கலாமா? என விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலக விசாரணைக்கு வரும் 29-ந் தேதி நேரில் சென்று ஆஜராவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், “சென்னையில் சிபிஐ அலுவலகம் உள்ள நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது; அதிமுக -பாஜக கூட்டணியில் தவெக இணைய மறுப்பதால்தான் இத்தகைய நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டிருக்கிறது” என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
