பரோட்டா சூரிக்கள் நிறைந்ததாக மாறிவிட்டது இந்திய சினிமா உலகம். ‘நீ கல்லாட்டம் ஆடுற. எல்லா கோடையும் அழி, நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்ற சூரியின் வசனத்தைப்போல இருக்கிறது சென்ஸார் போர்டின் லட்சணம். உட்தா பஞ்சாப் திரைப்படத்துக்கு சென்ஸார் போர்டு கொடுத்திருக்கும் ‘வெட்டு’, ‘கட்டு’ ஆகியவை ரொபில்மேக்ஸ் காமெடி ரகம்.
ஓப்பன் பண்ணினதும் ‘பஞ்சாப்’ பெயர்ப்பலகை வருது சார். அதை டெலிட் பண்றோம். அப்புறம் படத்துல அங்கங்க வர்ற பஞ்சாப், ஜலந்தர், சண்டிகர், அமிர்தசரஸ், டரன்டரன், ஜாஷன்புரா, அம்பேசர், லுதியானா, மோகா மாதிரியான ஊர் பெயர்கள் அத்தனையையும் துணியைப் போட்டு மூடிடணும். படம் புளூட்டோவுலயோ, மார்ஸுலையோ நடக்குதுன்னு கீழ டேக்லைன் போட்டுக்கலாம்ல. முக்கியமா, வசனத்துலயும் இந்த ஊர்ப்பெயர் வரும்போதெல்லாம் ‘பீப்’ போட்றோம். Chitta Ve பாட்டுல Chittave, Harami வார்த்தைக்கு பதிலா தேனே, மானே போட்டுக்கலாம். ஏன் தெரியுமா? Chittaன்னா வெள்ளை. வெள்ளை கலர்ல இருக்கும் போதைப் பவுடரை ‘போற்றிப் பாடடி பெண்ணே’ன்னு பாடுனா சும்மாவிடலாமா? அடுத்து Haramiன்னா ராஸ்கல் (பொறுக்கின்னு அர்த்தம்). ‘நான் பாட்டு பாட ஸ்டார்ட் பண்ணினா போலீஸ், திருடன் எல்லாம் ஆடுவாங்க. உன் முரட்டுத்தனத்தை என்கிட்ட காட்டாத. நான் எல்லாம் தெரிஞ்சவன். நீ கடவுளைத் துதிக்க பாடுற, நான் பொறப்புலயே பொறுக்கிடாவ்வ்வ்வ்’ எனக் கத்துகிறார்.
போதைக்கு அடிமையானவன் எப்படி கடவுளை துதிக்காமல், போதை மருந்தைப் போற்றிப் பாடலாம்? என்பதால் Harami என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள் காவல் தெய்வங்கள். அடுத்து, பஞ்சாபில் மிக மிக இயல்பாக பேசப்படும் ‘Behendchod’ உள்ளிட்ட எல்லா கெட்டவார்த்தைகளையும் ‘பீப்’ போட்டு நீக்கவேண்டும். சார், தமிழ்நாட்ல ‘பீப்’ங்குற வார்த்தையே கெட்டவார்த்தையா மாத்திட்டாங்கன்னு உங்ககிட்ட யாரும் சொல்லலயா? Behendchod என்ற வார்த்தையை கேட்காமல் பஞ்சாப் சென்று திரும்பிவந்த ஒருவரைக் காட்டினாலும் கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கலாம். அந்தளவுக்கு அதிகமாகப் பேசப்படும் வார்த்தை அது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தை என்பது கூடுதல் தகவல். விளக்கம்சொல்லும் அளவுக்கு நல்லவார்த்தை அல்ல. இதை நீக்கினாலும் A சர்டிஃபிகேட்தான் கொடுப்பேன் என்றபின், ஏன் நீக்கவேண்டும் என்பதுதான் படக்குழுவினரின் கேள்வி.
அடுத்தது மாஸ்டர்பீஸ். எலக்ஷன், எம்.பி., கட்சி, எம்.எல்.ஏ., பஞ்சாப், பார்லிமென்ட் என்ற வார்த்தைகளை நீக்கவேண்டும். புளூட்டோவுல தேர்தல் நடக்குதா? இல்லையான்னு கூகுள்ல தேடிப் பார்க்கணும். போதை ஊசி போடுவதை காட்டும் குளோஸ்-அப் சீன்களை நீக்கவும். தமிழ்ப் படங்கள்ல ஃபர்ஸ்ட் நைட் சீன் வரும்போது, பால் சொம்பு உருளுறதையும், நிலா மேகத்துக்குள்ள மறையுறதையும் காட்டி, ஏன் படம் எடுத்தாங்கன்னு இப்பதான் தெரியுது. மக்கள் கூட்டத்தின்முன்பு டாமி கேரக்டர் சிறுநீர் கழிக்கும் காட்சியை நீக்கவேண்டும். போதை மனிதர்கள் பப்ளிக் டாய்லெட்டில்கூட அவசரத்துக்குச் செல்லாமல், வீட்டுக்குப் போய்தான் சிறுநீர் கழிக்கிறார்கள் இந்தியத் திருநாட்டில். அவங்களை இப்படி தப்பா சித்தரிக்கலாமா? புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். நாய்க்கு ‘ஜாக்கி செய்ன்’ என்று பெயர் வைத்திருப்பதை நீக்கவும். Pirates of The Caribbean படத்தில் குரங்குக்கு ஜேக் என்று பெயர் வெச்சிருப்பாங்க, அவங்களுக்கும் ஒரு மனுவை போட்டுவிடுங்க சார்.
கடைசியாக டிஸ்க்லைமர். இதுதான் உச்சக்கட்ட காமெடி. ‘இந்தப் படம் போதைப் பழக்கத்தின் அச்சுறுத்தலையும், போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்துச்சொல்லும் படம். இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ள அவலத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கும் படம். அரசாங்கமும், போலிஸும் இதைத் தடுக்க போராடுவது எங்களுக்குத் தெரிகிறது. ஆனால், மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணையும்வரை, போதைமருந்தின் அச்சுறுத்தலைத் தடுக்கமுடியாது என்று படம் தொடங்கும்போது திரையிடவேண்டுமாம்.
இயக்குநர் ஒரு கதை எழுதினால், இவர்கள் தனியாக ஒரு கதை எழுதுகிறார்கள். அரசாங்கம் போதைமருந்தின் விற்பனையை கட்டுப்படுத்தாததை சுட்டிக்காட்டும் படத்தில், அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுவதாக சொல்லச்சொல்வதெல்லாம் ‘கண்ணாடியைத் திருப்புனா, ஆட்டோ எப்படி ஜீவா ஸ்டார்ட் ஆகும்’ என்ற ரகம்.