திரைப்படங்களுக்கு நிகராகத் தமிழில் வெப்சீரிஸ்களும் வரவேற்பைப் பெறும் என்பதை ‘நவம்பர் ஸ்டோரி’, ‘விலங்கு’ உள்ளிட்ட சில படைப்புகள் நிரூபித்திருக்கின்றன. Sulal 2 trailer release
அந்த வரிசையில் பெருவாரியான ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது ‘சுழல்’. இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரித்து வடிவமைத்த இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் 2022ஆம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தற்போது ‘சுழல் 2’ ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
பிரம்மா ஜி மற்றும் அணுசரண் முருகையன் இயக்கிய இந்த வெப்சீரிஸின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன், இளங்கோ குமரவேல், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், பிரேம் குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம்.சிஎஸ். இசையமைத்திருந்தார்.
மலைக்கிராமமொன்றில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் திருவிழா நடக்கும் நேரத்தில், அருகிலுள்ள ஆலையொன்றில் தீ விபத்து நிகழ்கிறது. அதேநேரத்தில், ஆலைப் பணியாளர்கள் சங்கத் தலைவரின் இரண்டாவது மகள் காணாமல் போகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் பெண் இன்ஸ்பெக்டரின் மகனும் காணாமல்போனது தெரிய வருகிறது.
பின்னர், அந்த இளம்பெண் மற்றும் ஆணின் சடலங்கள் ஒன்றிணைந்த நிலையில் அருகிலுள்ள குவாரியை ஒட்டிய நீர்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்படுகிறது. இறந்த பெண்ணின் சகோதரியும், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது நண்பரும் அந்தக் கொலைகள் குறித்து பல கோணங்களில் தேடலைத் தொடங்குகின்றனர். அதன் முடிவில், அவர்களைக் கொலை செய்தது யார் என்று தெரிய வந்ததா எனச் சொல்லியிருக்கும் ‘சுழல்’ முதல் பாகம்.
அந்த கொலையாளியைச் சுட்டுக் கொன்ற நந்தினி எனும் பெண் பாத்திரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் காட்டுகிறது இரண்டாம் பாகம். இதன் ட்ரெய்லர் அதிலிருந்தே தொடங்குகிறது.
அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் செல்லப்பா கொலை செய்யப்படுகிறார். நந்தினி வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, அவ்வழக்கையும் விசாரிக்கிறார். அப்போது, அந்தக் கொலையில் சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று எட்டு பேரைக் குறிக்கிறார். அவர்கள் அனைவரும் இளம்பெண்கள்.
அந்த எட்டு பெண்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் கொலையான செல்லப்பாவோடு சம்பந்தப்படுகின்றனர். அது எப்படி என்ற கேள்வியை முன்வைப்பதாக அமைந்துள்ளது ‘சுழல் 2’ ட்ரெய்லர்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை முதல் பாகம் உரக்கச் சொன்னது போன்று இரண்டாம் பாகமும் சமூகத்தில் நிகழ்ந்துவரும் ஒரு பிரச்சனையைப் பேசும் என்று நம்பலாம்.
முதல் பாகம் போன்றே இதிலும் கோயில் திருவிழா, ஆற்றில் நீராடும் மக்கள் கூட்டம், அம்மன் வேடமிட்டு ஆடும் ஆண், சமூகத்தில் மறைவாகத் தொடர் குற்றங்களை நிகழ்த்துகிற கும்பல், அதில் பாதிக்கப்படும் பெண்கள் என்று அமைந்துள்ள காட்சியாக்கம், ‘இது நல்லதொரு த்ரில்லர் ஆக அமையும்’ என்று உணர்த்துகிறது.
முந்தைய பாகத்தில் நடித்தவர்களோடு இதில் புதிதாக மலையாள நடிகர் லால், சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், ‘மாவீரன்’ படத்தில் நடித்த மோனிஷா ப்ளெஸ்ஸி உள்ளிட்ட சிலர் இணைந்திருக்கின்றனர்.
ஆப்ரகாம் ஜோசப் ஒளிப்பதிவையும், தயாரிப்பு வடிவமைப்பை அருண் வெஞ்சாரமூடுவும், இசையமைப்பை சாம் சிஎஸ்ஸும் கையாண்டிருக்கின்றனர்.
பிரம்மா ஜி, சர்ஜுன் கேஎம் ஆகியோர் இதனை இயக்கியுள்ளனர். வரும் பிப்ரவரி 28ஆம் தேதியன்று இந்த சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி என்று இதில் நிறைந்துள்ள நட்சத்திரப் பட்டாளமே, ‘சுழல் இரண்டாம் பாகம்’ நமக்கு நிறைவான அனுபவத்தைத் தரக்கூடும் என்றுணர்த்துகிறது. அவ்வாறு அமைந்தால், இனி தமிழில் நிறைய வெப்சீரிஸ்கள் வெளியாகும் சூழல் உருவாகலாம்!
சுழல் 2 ட்ரெய்லர்
.