அமீரின் பருத்திவீரன் நடிகை சுஜாதாவுக்கு தந்த அடையாளம்!
சுஜாதா பாலகிருஷ்ணன். தமிழ் திரையுலகம் சந்தித்த குணசித்திர நடிகைகளில் ‘தனித்துவம்’ கொண்டவர். தோற்றம் மட்டுமல்லாமல் இவரது குரலும் நடிப்பும் அதுவரை தமிழ் சினிமா கண்டிருந்த பெண்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்ததே அதற்குக் காரணம். sujatha sivakumar who introduced by kamal haasan
கருப்பு நிறம், சாதாரண உயரம், பார்த்த நொடியில் பிடித்துப் போகிற முகம், திரும்பிப் பார்க்க வைக்கிற வகையிலான கிறீச்சிடும் குரல் என்று நாம் பார்த்துப் பழகிய ஒரு பெண் போன்று திரையில் தென்படுபவர் சுஜாதா.
சண்டை பிடிக்கிற காட்சியானாலும், சாந்தமாகப் பேசுகிற பாத்திரமானாலும், அந்தந்த கதைகளோடு பாந்தமாகப் பொருந்தி நிற்கிற ஒருவராகத் தன்னை வெளிப்படுத்துக் கொள்வது இவரது நடிப்பின் சிறப்பு.
தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதே ஒரு கொண்டாட்டம் என்றெண்ணுகிற ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சுஜாதா. பள்ளி, கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ’அடுத்தது என்ன’ என்றிருந்தபோது, இவருக்குச் பாலகிருஷ்ணனுடன் உடன் திருமணம் ஆனது.
நாடகங்களில் நடிப்பதென்பது கணவர் பாலகிருஷ்ணனுக்கு பிடித்தமான விஷயம். அதற்காக ஒரு அமைப்பொன்றைத் தொடங்கி, விழிப்புணர்வு நாடகங்களை மதுரை வட்டாரத்தில் நடத்தி வந்திருக்கிறார். அப்படித்தான் நடிப்பு மீது சுஜாதாவுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. சில நேரங்களில் குறிப்பிட்ட கலைஞர்கள் வராதபோது அப்பாத்திரத்தில் திடீரென்று தோன்றி நடித்த அனுபவம் இவருக்குப் பலமுறை நேர்ந்திருக்கிறது.
அது தொடர்கதையானபோது, மதுரை வட்டாரத்தில் இருந்த நாடக ரசிகர்களிடையே சுஜாதாவின் பெயரும் பிரபலமாகியது. அப்படித்தான் ‘விருமாண்டி’யில் நடிக்கிற வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.
அபிராமிக்கு மதுரை வட்டார வழக்கில் பேசக் கற்றுக் கொடுப்பதற்காகச் சுஜாதாவை நாடியிருக்கிறது படக்குழு. கூடவே, பசுபதியின் மனைவியாக நடிக்கிற வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
’ஒரு பட அனுபவம் போதும்’ என்ற முடிவுடன், கமல்ஹாசனின் இயக்கத்தில் நடிக்கிற பெருமிதத்துடன் ‘விருமாண்டி’யில் நடித்தார் சுஜாதா. பேச்சி எனும் பாத்திரமாகத் தோன்றினார்.
அப்படம் வெளியானபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பும் கிடைத்தது.
அதன்பிறகு சில மாதங்களிலேயே சுஜாதாவுக்கு இரண்டாவது மகள் பிறந்தார். அவரை வளர்த்தெடுக்கிற பொறுப்புக்காகப் பட வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்தார்.

ஆனாலும், சில காலம் கழித்து ஒரு பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ‘நீங்கள் நடித்தே ஆக வேண்டும்’ என்று அவரை வற்புறுத்தியது. அந்த படம், அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’.
விருமாண்டியில் அறிமுகம் ஆனபோதும், இன்றுவரை சுஜாதா உடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது அப்படப் பெயர்.
நாயகியாக வந்த ப்ரியா மணியின் தாயாக அதில் நடித்தார் சுஜாதா. தனது விருப்பங்களுக்கு எதிராக நடக்கிற கணவர், மகள் மீது கோபத்தைச் சரிவரக் காட்ட முடியாமல் திணறுகிற ஒரு சாதாரண பெண்ணாக, ‘பருத்தி வீரன்’னில் மிளிர்ந்தார்.
வசூல்ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சனரீதியிலும் பெரிய வெற்றியை ஈட்டியது அந்த படம். சிறந்த துணை நடிகை ஆக சுஜாதாவுக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.
பிறகு வேல், பிரிவோம் சந்திப்போம், குருவி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் சுஜாதா.
அந்த வரிசையில் பாண்டியராஜ் இயக்குனராக அறிமுகமான ‘பசங்க’ அவரது நடிப்பு வாழ்வில் இன்னொரு மைல்கல் ஆக அமைந்தது.

பிறகு களவாணி, மௌனகுரு, சுந்தரபாண்டியன், வீரம், ரம்மி. ரேணிகுண்டா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று அடுத்தடுத்து அவருக்குப் படங்கள் வாய்த்தன. இப்படங்களில் அம்மா, அக்கா, அண்ணி, அத்தை என்று நாயகன், நாயகியின் வெவ்வேறு உறவாகத் திரையில் தோன்றினார் சுஜாதா.
‘இப்படித்தானே கிராமங்களில் சில பெண்கள் இருப்பார்கள்’ என்று நாம் உணர்கிறவாறு அதில் அமைந்தன அவர் ஏற்ற பாத்திரங்கள்.
ஒரு கதாபாத்திரம் திரையில் எத்தனை நிமிடங்கள் வருகிறது? எத்தனை காட்சிகளில் இடம்பெறுகிறது என்பதற்கு சுஜாதா பாலகிருஷ்ணன் ஒருபோதும் முக்கியத்துவம் தந்ததில்லை. அதேநேரத்தில் சில நொடிகள், நிமிடங்களே வந்தாலும், அதில் தனது திறமையை வெளிப்படுத்துகிற தன்னம்பிக்கை இவரிடத்தில் எப்போதும் உண்டு.

அதற்கான பரிசாக அமைந்தது, விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’வில் வரும் ஆச்சி பாத்திரம்.
பதின்ம வயதில் இருக்கும் நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள், மார்க்கெட்டை தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு ரௌடி இவர்களைத் தாண்டி அக்கதையின் மையமாகத் திகழ்ந்தது அப்பாத்திரம். அப்படத்தின் வெற்றி சுஜாதாவை ‘ராசியானவர்’ என்ற சினிமா செண்டிமெண்டுக்குள் தள்ளியது.
அதன் தொடர்ச்சியாக, சில படங்களில் ஒரு காட்சியிலாவது அவரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சில வாய்ப்புகள் துரத்தியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அவரும் ஏற்று நடித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் அது போன்ற வாய்ப்புகளில் தவிர்க்க முடியாதவற்றை மட்டும் ஏற்பது என்ற நிலைக்கு வந்தார். அதன் தொடர்ச்சியாக, மிகக்கவனத்துடன் தேர்ந்தெடுத்து மிகச்சில படங்களில் மட்டுமே இடம்பெறுவது என்ற முடிவைக் கையிலெடுத்தார்.

திருநாள், விஸ்வாசம், காப்பான், ஜெய்பீம், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்கள் அந்த வரிசையில் அமைந்தன.
2020க்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார் சுஜாதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ எனும் தொலைக்காட்சி தொடரில் மையப்பாத்திரங்களின் தாயாகத் தற்போது நடித்து வருகிறார்.
சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

ஓடிடி தளத்தில் வெளியான ‘கோலிசோடா ரைசிங்’கிலும் தலைகாட்டினார் சுஜாதா. இது ’கோலிசோடா’வின் தொடர்ச்சியாக அறியப்படுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த இல்லறப் பயணத்திற்கு இடையே திரைத்துறையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருவது அபூர்வமான விஷயம். அதனைக் கைக்கொண்டிருக்கிறார் சுஜாதா.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பேட்டியொன்றில், திரைத்துறை சார்ந்த பயிற்சி நிறுவனத்தை நடத்துவதே எதிர்கால ஆசை என்று தெரிவித்திருந்தார் சுஜாதா. சாதாரண மனிதர்களால் சினிமாவில் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தைத் தகர்த்த திரையாளுமைகளில் ஒருவராகியிருக்கும் இவர், நிச்சயமாக அதையும் ஒருநாள் சாதிப்பார்..!