கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேரும் அதே நாளில் ஆட்டு வியாபாரியை கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி அன்று விமான நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதிஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினரான தவசி என்ற குணா என்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று பேரையும் கடந்த 27ஆம் தேதி ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அன்னூர் அருகே உள்ள செரையாம்பாளையம் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி அன்று தேவராஜ் என்ற ஆட்டு வியாபாரியை அவர்கள் அடித்துக் கொலை செய்த பகிர் தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்டு வியாபாரி தேவராஜ் வழக்கமாக ஓய்விருக்கும் இடத்தின் அருகில் 3 பேரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது தேவராஜ் இவர்களை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் சேர்ந்து கட்டையால் அவரை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் நவம்பர் 5ஆம் தேதி கணவரை காணவில்லை என்று ஆட்டு வியாபாரியின் மனைவி புகார் அளித்துள்ளார். ஆறாம் தேதி கோவில்பாளையம் காவல் எல்லையில் இருந்து தேவராஜ் சடலமாக மீட்கபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தேவராஜ் கொலை வழக்கில் மூன்று பேரையும் விசாரிக்க கோவில்பாளையம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் ஆட்டு வியாபாரியை தாக்கி 3 பேரும் கொலை செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகள் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை விரைவாக நடத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில், கைதாகியுள்ள 3 பேர் மீதும் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் கோவை போலீசார் நேற்று மாலை தாக்கல் செய்தனர்.
