சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பதாக இருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போல சென்னைக்கான திருவிழாவாக திகழ்கிறது சென்னை புக் ஃபேர் எனப்படும் புத்தகக் காட்சி.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடைபெறும் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (ஜனவரி 3) மாலை 4.30 மணிக்கு துவங்குவதாகவும், புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை புத்தக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் இன்று (ஜனவரி 3) பகல் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், “47வது சென்னை புத்தகக்காட்சி திறப்பு விழா நேரம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கும் (03/01/2024) 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்..
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார். தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அவகாசம்!