சு.வெங்கடேசன் பேச்சும்… மூர்த்தி பதிலும்: என்ன நடக்கிறது மதுரை திமுக கூட்டணியில்?

Published On:

| By Kavi

மதுரையில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற பேச்சு எழுந்துள்ளது.

கடந்த வாரம் மதுரை வண்டியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. அப்போது, வண்டியூர் சாலையை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், வண்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்ட ஒரு நோட்டீஸ் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது

அதில், “மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டுமுறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றிக்கூட சொல்லாத சு.வெங்கடேசனை “கண்டா வரச் சொல்லுங்க”. வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன? இவண்… வண்டியூர் பொதுமக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தசூழலில், ஊமச்சிக்குளத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய சு.வெங்கடேசன், “வண்டியூர் சாலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அதை செப்பனிட வேண்டும். ரேஷன் கடையில் தரமில்லாத பொருள்கள் இருக்கிறது. இதை சொன்னால் கோபம் வருகிறது என்றால்… அது யாராக இருக்கும்.

தரமில்லாமல் ரேஷன் பொருட்களை போடுபவர்களுக்கு தான் கோவம் வரும். இதை கேட்டால் “கண்டா வரச்சொல்லுங்க” என போஸ்டர் ஒட்டுவார்கள் ஊர் பொதுமக்கள் என்று போஸ்டரெல்லாம் ஒட்டி எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நீங்கள் அசிங்கப்பட்டுக் கொள்ளாதீர்கள்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கிடையே மதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு பட்டா கேட்டு சு.வெங்கடேசன் பேரணி நடத்தி வருகிறார். அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு பத்திரம்/பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் கூட மதுரையில் சு.வெங்கடேசன் தலைமையில் பேரணி நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களது கையில், “தமிழக அரசே மதுரை நகரில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிடு” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தநிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான மூர்த்தி, பெண்களை திரட்டி பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணிக்கு எதிராக காட்டமாக பேசியுள்ளார்.

மதுரை ஆலத்தூரில் இன்று (அக்டோபர் 19) நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ”13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாவை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வழங்க இருக்கிறார்கள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிட வேண்டும்

நம்முடைய முதலமைச்சர் எது சட்டத்திற்கு உட்பட்டதோ அதன்படி அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் தகுதியுடையவர்களுக்கு பட்டா வழங்குவார்கள் அதற்கான பணி துவங்கிவிட்டது

பெயருக்காகவும் புகழுக்காகவும் எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரச்சாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் செய்து வருகிறார்.

நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்கக் கூடியது தான் நம்முடைய ஆட்சி.

கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமார்ந்து விட வேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத் துறையும், அரசு அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை செய்துவருகின்றனர்.

முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரையும் நம்பி இல்லை நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக உறுதுணையாக இருப்பதுதான் திமுக” என்று கூறியுள்ளார்.

வண்டியூர் போஸ்டரும், சு.வெங்கடேசனின் பதிலும், அவருக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளிக்கும் வகையில் பேசியதும் மதுரையில் திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்கவாசல்’ ; கதை இது தானா..?

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs நவ்யா… வேட்பாளரை அறிவித்த பாஜக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share