நாட்டின் விடுதலைப் போரில் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கங்கள் உரத்து கேட்ட போது நீங்கள் (இந்துத்துவா Hindutva Leaders) எந்த முழக்கத்தின் பின்னால் அணிவகுத்தீர்கள்? என்று மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு தொடர்பான சிறப்பு விவாதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: பக்கிம் சந்திரர் எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் பாடலுக்கு முதன்முதலில் மெட்டமைத்து பாடிய ரவீந்திரநாத் தாகூரே, இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு எழுதிய ‘காரே பைரே’ என்ற நாவலில் அந்தப் பாடல் குறித்து விவாதித்திருக்கிறார்.

4 சரணங்கள் நீக்கம்
அரசியல் சாசன சபை அந்தப் பாடலை விரிவாக விவாதித்து, இரண்டு சரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, நான்கு சரணங்களை விடுத்து ஒரு முடிவு செய்தது. இவ்வளவுக்கும் பிறகு, இந்த அவையில் இந்தப் பாடலின் 150 ஆண்டு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி விரும்பியுள்ளது.
பிரதமர் குறிப்பிட்டதுபோல், ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆன்மாவாக இருந்தது உண்மை தான். ஆனால் அது ஒரே முழக்கம் அல்ல.
- ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்திற்கு இம்மியளவும் குறையாதது ‘ஜெய்ஹிந்த்’.
- ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்திற்கு துளியளவும் குறையாதது ‘இன்குலாப் ஜிந்தாபாத்’.
ஒவ்வொரு முழக்கத்திற்குப் பின்னாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டார்கள்.
- தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள்
- துப்பாக்கிக் குண்டுக்கு நெஞ்சு காட்டியவர்கள்
- பீரங்கியின் வாயிலில் சுட்டுத் தள்ளப்பட்டவர்கள்
- குதிரையின் குளம்பால் எத்தி உதைக்கப்பட்டவர்கள்
- ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள்
- சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தாக்கியவர்கள்
- தண்டியில் உப்பு காய்ச்சியவர்கள்
- தூத்துக்குடியில் இருந்து கப்பல் ஓட்டியவர்கள்
என ஒவ்வொரு முழக்கத்துக்கும் பின்னால் மக்களின் தியாகம் இருந்தது.
அதுசரி, நீங்கள் எந்த முழக்கத்தின் பின்னால் திரண்டீர்கள்?
இந்த முழக்கங்கள் யாருக்கு எதிராக எழுப்பப்பட்டதோ அவர்களுக்குப் பின்னால் நீங்கள் இருந்தீர்கள்.

மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள்
தப்பித் தவறி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்குக் கூட ‘தவறிப் பங்கேற்றுவிட்டோம்’ என்று மன்னிப்பு கடிதம் எழுதி வெளியே வரும் நிலை உண்டாயிற்றே! இந்த முழக்கங்களை ஏந்தியவர்கள், எழுதியவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்கள்.
ஆனால் அதற்கு நேர்மாறான திசையில் இருந்த நீங்கள் இன்றைக்கு இதைப் பற்றி விவாதம் நடத்துவதைப் பார்த்தால், உங்களது அரசியலை இந்த தேசத்தின் முன்னால் பட்டவர்த்தனமாக விவாதிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்குள்ளது.
இந்தியாவின் பன்மைத்துவம் ‘ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்’ என்ற முழக்கத்தை ‘வந்தே மாதரம்’ என்பதை விட மேலே எழச் செய்து உள்ளது. உங்கள் உதட்டில் ‘ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்’ என்ற வார்த்தை என்றைக்காவது வந்ததா? அதற்கு பதிலாக, உங்கள் மாநில அரசுகள் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புகின்றன.
பிறர் உதடு என்ன பாட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சுதந்திரம் உங்களுக்கு யார் கொடுத்தது?
ஆறாத காயங்கள் ஆற்றப்பட வேண்டியவை. ஆனால் காயங்களை கிளறும் போது மட்டுமே உங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கின்றதால், நீங்கள் காயங்களைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள்.
இதோ இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடம். இதற்குள் நீங்கள் 12 திருவுருவச் சிலைகளை வைத்திருக்கிறீர்கள்- சிவன் கிறிஸ்தவத்தைச் சார்ந்த ஒரு திருவுருவச் சின்னமாவது கிடைக்கவில்லையா? திருக்குர்ஆனைச் சார்ந்த ஒரு அடையாளமாவது கிடைக்கவில்லையா? இந்த தேசத்தின் பன்மைத்தன்மை இந்த அவையிலும் பிரதிபலிக்கக் கூடாதா? பன்மைத்தன்மையை ஒதுக்கும் உங்களிடம் தேசபக்தியைப் பற்றி உபதேசம் கேட்க வேண்டிய நிலை இல்லை. பன்மைதன்மையே இந்திய வரலாறு.
திருப்பரங்குன்றம் தீபம்
அதற்கு எதிராக உங்கள் உபதேசம் திருப்பரங்குன்றம் வரை நீளுகிறது. எல்லோரும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தைப் பார்க்கிறார்கள். ஆனால் உங்கள் கண்களுக்கு தர்கா மட்டும் தெரிகிறது.
- மக்களுக்குத் தேவை பக்தி
- உங்களுக்குத் தேவை பகை. – மக்களுக்குத் தேவை ஆன்மீகம்
- உங்களுக்குத் தேவை கலவரம்.
பக்கிம் சந்திரரின் கவிதை, நாவல் பற்றி பேசும்போது கவியரசு கண்ணதாசன் கூறிய கதையை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது: சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே இருந்த சுவர் இடிந்து விழுந்தது. அதை யார் கட்ட வேண்டும் என்று இரண்டு தரப்பும் சண்டையிட்டபோது, சொர்க்கத்தார் “நாங்கள் வழக்கு தொடரப் போகிறோம்” என்றார்கள். உடனே நரகத்தார் “நீங்கள் வழக்கு தொடரலாம்; ஆனால் தீர்ப்பு சொல்ல வேண்டியவர் எங்களிடம் இருக்கிறார்” என்றனர். இது தமிழ்நாட்டுக்கு இன்றைக்கு பொருந்துகிறது. மதுரைக்கு மிகப் பொருந்துகிறது.

திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக “புண்ணியவான்கள் இங்கே விளக்கேற்றலாம்” என்று கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் “நான் புண்ணியவான் அல்ல; அங்கே விளக்கேற்ற மாட்டேன்” என்று ஒருவர் பிடிவாதமாகக் கூறுகிறார். உங்கள் தீர்ப்புக்கு முன் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்பதுதான் நாங்கள் சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயம்.
வந்தே மாதரம் 150 ஆண்டு?
‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஆதாரத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணம் முன்னரே எழுதப்பட்டது; நான்கு சரணம் பின்னர் ‘ஆனந்த மடம்’ நாவலில் சேர்க்கப்பட்டது. எழுதப்பட்ட துல்லியமான ஆண்டு எங்கும் இல்லை. ஆனால் உங்களுக்கு வேறு தேவை இருக்கிறது — வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், மேற்கு வங்காள தேர்தல். உங்களின் தேவை எப்போதும் தேர்தல் தான்.
நாட்டின் தேவை எது?
நாட்டின் தேவையைப் பற்றி நீங்கள் பேச விரும்பவில்லை.
- நான்கு தொழிலாளர் நலச் சட்டங்களால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதைப் பற்றி பேசவில்லை.
- விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருக்கிறது; அதைப் பற்றி பேசவில்லை.
-டெ ல்லியின் காற்றுமாசு வாழ்வையே முடக்கியுள்ளது; அதைப்பற்றி பேச தயாரில்லை.
இறுதியாக, பிரதமர் பாரதியை நினைவூட்டினார்கள். பாரதிதான் ‘வந்தே மாதரம்’ பாடலை 1908 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார். அந்தப் பாரதியின் அருமையான வரிகளை நான் நினைவூட்டுகிறேன்:
“தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதர மென்பார்!” அது பாரதி உங்களுக்கே சொன்னது. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. பேசினார்.
