அரிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பனுக்காக, சுமார் 50க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் 2 கி.மீ தூரம் நடந்து சென்று அவருடன் சேர்ந்து பட்டமளிப்பு புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Students took Graduation Photo with Dying friend
எனினும் அதற்கு மறுநாள் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது அவரது நண்பர்கள் உட்பட உலகளவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்தவர் ரென் ஜுஞ்சி. 15 வயதான இவர் அங்கு மேல்நிலை வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்தாண்டு அவருக்கு நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் ஒரு புற்றுநோயான ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நிணநீர் மண்டலம் என்பது நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இது உடலின் திரவ சமநிலையை பராமரிக்கிறது, தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

உயிருக்கு போராடிய அவரது மேல்சிகிச்சைக்காக அவர் பள்ளிப்படிப்பை கைவிட்டு, வேறொரு நகரத்தில் இருக்கக்கூடிய உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருக்கும் யிலோங் மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக திரும்பினார்.
இதற்கிடையே அவருடன் படித்த சுமார் 50க்கும் மேற்பட மாணவர்கள் தங்களது பட்டமளிப்பு விழாவிற்காக சமீபத்தில் தயார் ஆனார்கள். மிகவும் மகிழ்ச்சியான அந்த தருணத்தில், அவர்களின் ஆசிரியர் ஒருவர், ”உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ரென் ஜுஞ்சினுடன் பட்டமளிப்பு விழாவை கொண்டாடலாமா?” என்ற யோசனையை முன்வைத்தார்.
அதனை அனைத்து மாணவர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில், பள்ளியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கும் ரென் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு நடந்தே சென்றனர்.
அங்கு அவருக்கு பட்டமளிப்பு விழா உடை அணிவித்து, ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனை வளாகப் பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை சூழ்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர். அது ‘உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த பட்டமளிப்பு புகைப்படம்” என்று இணையத்தில் வைரலானது.

மேலும் ’நீ விரைவில் குணமடைந்து எங்களிடம் திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ எனக்கூறி அனைவரும் கையெழுத்திட்ட கூடைப்பந்தையும் வழங்கினர்.
இதுதொடர்பான புகைப்படங்களையும், மாணவர்களின் பரிசையும் ரென்னின் உறவினர் ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் இந்த சம்பவத்தை குறித்து பாராட்டி வந்தனர்.
எனினும் துரதிர்ஷ்டவசமாக, புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரென் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு காலமானது அவரது நண்பர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
அவரது 16வது பிறந்தநாள் அடுத்த மாதத்தில் கொண்டாடப்பட இருந்த நிலையில், அவரது உயிரிழப்பு பலருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.